Published : 08 Nov 2025 12:01 PM
Last Updated : 08 Nov 2025 12:01 PM
பமாகோ: ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். அவர்கள் வேலை செய்துவந்த தனியார் மின்சார நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இதனை உறுதி செய்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க அங்கு அல்குவைதா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களின் அட்டாகசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலியின் கோர்பி எனும் பகுதியில் இந்தியர்கள் சிலர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் பணியாற்றிவந்த மின்சார ஒப்பந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்கு இதனை உறுதி செய்தூள்ளார். அவர் அளித்தப் பேட்டியில், “எங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த 5 இந்தியர்கள் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்டுள்ளனர். இதனால், மற்ற இந்தியர்களை தலைநகர் பமகோவிலில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளோம். இந்தக் கடத்தலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.” என்றார்.
மாலியில், கடந்த சில ஆண்டுகளாகவே அல்குவைதா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களின் கைகள் ஓங்கியுள்ளன. அதிலும் அல்குவைதா ஆதரவு எற்ற ஜேஎன்ஐஎம் என்ற குழுவின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளன. இதனால் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடியும் நிலவுகிறது.
மேலும், மாலியில் வெளிநாட்டு நபர்களைக் கடத்துவது என்பது வழக்கமான நடவடிக்கையாகிவிட்டது. 2012-ல் இருந்து அங்கு ராணுவக் கிளர்ச்சி, ஜிகாதி குழுக்களின் தாக்குதல் மேலோங்கியிருப்பதால் இதுபோன்ற கடத்தல்களும், அதற்குப் பெரும் பிணைத் தொகை பெற்று பிணைக் கைதிகளை விடுவிப்பதும் தொடர்கதையாகிவிட்டன.
கடந்த செப்டம்பர் மாதம், ஜேஎன்ஐஎம் குழு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் ஈரானைச் சேர்ந்த ஒருவரைக் கடத்தியது. பின்னர் 50 மில்லியன் அமெரிக்க டாலர் பிணையாகப் பெற்றுக் கொண்டு அவர்களை விடுவித்தது.
இந்த ஜேஎன்ஐஎம் ஆயுதக் குழு வடக்கு மாலி, நாட்டின் மையப்பகுதி மற்றும் நைஜர், பர்கினா ஃபாசோ நாடுகளின் எல்லையோரப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. மாலியில் ராணுவ ஆட்சியின் தலைவர் அசிமி கோய்டா, தீவிரவாதக் குழுக்களை முறியபடிப்பதாக சூளுரைத்துள்ளார். இதற்காக அவர் ரஷ்ய உதவியை நாடியுள்ளார். அது குறிப்பிடத்தக்க அளவு அவருக்கு பலனும் கொடுத்து வருகிறது.
இருப்பினும், இப்போதைக்கு மாலியின் தலைநகர் பமாகோ ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட ஜேஎன்ஐஎம் ஆயுதக் குழு தலைநகர் நோக்கி வலுவாக முன்னேறி வருவது மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகளையும் இந்த ஜேஎன்ஐஎம் ஆயுதக் குழு கட்டாயமாக்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT