Published : 07 Nov 2025 09:07 AM
Last Updated : 07 Nov 2025 09:07 AM
மணிலா: பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி புயலுக்கு 114 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பசிபிக் கடலில் உருவான கல்மேகி புயல் நேற்று முன்தினம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பிராந்தியத்தை கடந்து தென் சீனக் கடல் நோக்கி நகர்ந்தது. இதில் பிலிப்பைன்ஸின் மத்திய பிராந்தியத்தில் உள்ள தீவுகளில் பலத்த சூறைக்காற்று வீசியதுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் நீக்ரோஸ் ஆக்சிடென்டல், செபு உள்ளிட்ட மாகாணங்கள் வெள்ளக் காடாக மாறின. இதில் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், ஆற்றங்கரையோர வீடுகள், பெரிய அளவிலான கப்பல் கன்டெய்னர்களும் கூட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
பிலிப்பைன்ஸ் இந்த ஆண்டு எதிர்கொண்ட பேரிடர்களில் மிக மோசமான பேரிடராக இது கருதப்படுகிறது. இந்நிலையில் பிலிப்பைன்ஸ் மத்திய பிராந்தியத்தில் கல்மேகி புயலுக்கு 114 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர். 127 பேரை காணவில்லை.
அதிகாரி ஒருவர் கூறுகையில், “கல்மேகி புயலால் சுமார் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 4,50,000 பேர் உட்பட 5,60,000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்” என்றார்.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் நேற்று அந்நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார். அவசர நிதியை அரசு விரைவாக வழங்கவும், உணவுப் பதுக்கல், அதிக விலை நிர்ணயம் ஆகியவற்றை தடுக்கவும் இது உதவும் என கூறப்படுகிறது.
கல்மேகி புயலுக்கு செபு மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 71 பேர் உயிரிழந்த நிலையில் 69 பேர் காயம் அடைந்தனர். மேலும் 65 பேரை காணவில்லை. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி ஏற்பட்ட 6.9 ரிக்டர் நிலநடுக்க பாதிப்பில் இருந்து செபு இன்னும் மீண்டுவராத நிலையில் மற்றொரு பேரிடரால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் பசிபிக் கடலில் உருவாகியுள்ள மற்றொரு புயல், கடும் புயலாக வலுப்பெற்று பிலிப்பைன்ஸின் வடக்கு மாகாணங்களை அடுத்த வார தொடக்கத்தில் தாக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT