Last Updated : 03 Nov, 2025 06:49 PM

2  

Published : 03 Nov 2025 06:49 PM
Last Updated : 03 Nov 2025 06:49 PM

“ஆப்கன் மூலம் பினாமி போரை தொடுக்கிறது இந்தியா” - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் | கோப்புப் படம்

இஸ்லாமாபாத்: நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு பக்கங்களிலும் நமது நாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாகிஸ்தானின் ஜியோ செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கவாஜா ஆசிப், "ஆப்கனிஸ்தானை இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பொம்மலாட்டத்தில் பொம்மைகளை பின்னால் இருப்பவர்கள் இயக்குவதுபோல, ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது. இந்தியா சொல்படி பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கனிஸ்தான் செயல்படுகிறது. ஆப்கனிஸ்தான் மூலம் பினாமி போரை பாகிஸ்தான் மீது இந்தியா தொடுக்கிறது

இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்றால், எங்களிடம் இருக்கிறது. பாகிஸ்தானின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரு முனைகளிலும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள இந்தியா விரும்புகிறது. எனினும், கத்தார் மற்றும் துருக்கியின் முயற்சியால், ஆப்கனிஸ்தான் - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆப்கனிஸ்தான் உடனான பிரச்சினைக்கு உடனடி தீர்வு மிகவும் அவசியம் என்பதில் பாகிஸ்தான் அரசியல்வாதிகள், அரசு, மக்கள் என அனைவரும் உறுதியாக உள்ளனர். அதாவது, ஆப்கனிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாதம் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்" என தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 9-ம் தேதி, காபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் மீது ஆப்கனிஸ்தானின் தலிபான் அரசு குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. அதேநேரத்தில், தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்புக்கு ஆப்கனிஸ்தான் ஆதரவாக செயல்படக்கூடாது என பாகிஸ்தான் எச்சரித்தது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக தலிபான் அரசு பதில் தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்தது.

கத்தாரும் துருக்கியும் மேற்கொண்ட சமரச முயற்சியை அடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. தற்போது, இந்தியா மீது குற்றம் சாட்டியுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், அதற்கான ஆதாரங்களை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x