Published : 02 Nov 2025 06:59 AM
Last Updated : 02 Nov 2025 06:59 AM
பெய்ஜிங்: சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணம் ஹார்பின் நகரில் உள்ள ஒரு ரெசார்ட்டில் பாரம்பரிய சீன மருத்துவ முறைப்படி ஹாட்பாட் குளியல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
5 மீட்டர் விட்டமுள்ள ஒரு வட்ட வடிவ தொட்டியில் வெந்நீர் நிரப்பப்பட்டுள்ளது. அது பார்வையாளர்களைக் கவர்கிறது. ஒரு பிரிவு சிவப்பாகவும், மற்றொரு பிரிவு வெள்ளை நிறத்திலும் உள்ளது அந்த தொட்டியில் சிவப்புப் பக்கம் உள்ள தண்ணீரில் மிளகாய், கத்தரிக்காய், முட்டைக்கோஸ் ஆகியவை நிரப்பப்பட்டுள்ளன. வெள்ளை பக்கம் உள்ள பிரிவில் பால், சிவப்பு பேரீச்சம்பழம், பெர்ரி பழங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இதுபோன்ற சூடான, சூப் போன்ற குளங்களில் பொதுமக்கள் மூழ்கி எழும்போது அவர்களுக்கு புத்துணர்வு கிடைக்கிறது என்று சீனாவிலிருந்து வெளியாகும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.தற்போது இதுபோன்ற ஹாட்பாட் குளியலை மேற்கொள்ள சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு கட்டணம் ரூ.2,100.
இதுகுறித்து இந்த ரெசார்ட்டின் ஹாட்பாட் குளியல் பிரிவில் உள்ள ஊழியர் ஒருவர் கூறும்போது, “இந்த ஹாட்பாட் குளியல் தொட்டியில் சிவப்பு நிறத்தில் உள்ள நீர், உண்மையில் ரோஜா இதழ்களில் இருந்து உருவாகிறது. தினமும் புதிய ரோஜா இதழ்களை அதில் கொட்டுவோம். மேலும், இங்கு பயன்படுத்தப்படும் மிளகாய்கள் லேசான காரமுள்ள வகையைச் சேர்ந்தவை. இதில் குளிப்பவர்களின் ரத்த ஓட்டத்தை இந்த மிளகாய்கள் மேம்படுத்துகின்றன. வெள்ளை நிறத் தொட்டியில் உள்ள பால், சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT