Last Updated : 01 Nov, 2025 09:24 PM

 

Published : 01 Nov 2025 09:24 PM
Last Updated : 01 Nov 2025 09:24 PM

சூடானில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு: உயிர் பயத்தில் மக்கள் - நடப்பது என்ன?

கர்த்தூம்: வடகிழக்கு ஆப்பிரிக்க பகுதியில் அமைந்துள்ள சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் அந்நாட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அல்-ஃபாஷர் நகரை கைப்பற்றி உள்ளது பலம் பொருந்திய துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப்.

இந்த நகரை கைப்பற்றும் தங்கள் முயற்சியில் தங்களுக்கு துஷ்பிரயோகம் செய்த போராளிகள் பலரை கைது செய்துள்ளதாக ஆர்எஸ்எஃப் தெரிவித்துள்ளது. அல்-ஃபாஷர் நகரில் சுமார் 1.77 லட்சம் மக்களின் நிலை என்னவென்று அறிந்து கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. 65,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நகரில் இருந்து தப்பி உள்ளனர்.

கடந்த 2023 ஏப்ரல் முதல் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்எஸ்எஃப் செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு இருதரப்புக்கும் இடையே அப்போது முதல் மோதல் நிலவி வருகிறது. கிட்டத்தட்ட நாட்டின் மேற்கு பகுதி முழுவதும் இப்போது ஆர்எஸ்எஃப் கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற பகுதிகள் ராணுவத்தின் வசம் உள்ளது. அண்மையில் அல்-ஃபாஷர் நகரை ஆர்எஸ்எஃப் கைப்பற்றியது.

அதன் பின்னர் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதோடு பாலியல் வன்முறை, கொள்ளை, கடத்தல் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகின்றன. தகவல் தொடர்பு வசதியின்றி மக்கள் தவிப்பதாக தகவல் வெளியாகிறது.

இந்தச் சூழலில் யேல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், அல்-ஃபாஷர் நகரின் சாட்டிலைட் படங்களை ஆய்வு செய்தனர். அக்.27 முதல் 31-ம் தேதி வரையிலான நாட்களில் பதிவான சாட்டிலைட் படங்களை ஆய்வு செய்ததில் சுமார் 31 இடங்களில் உயிரிழந்த மக்களின் உடல்களில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதை அல்-ஃபாஷர் நகரில் இருந்து தப்பிய மக்களும் சர்வதேச ஊடக நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். ஆர்எஸ்எஃப் செயலுக்கு ஐ.நா உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சூடான் மோதல்: இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் என்பது ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், உள்நாட்டு போர்களின் தாக்கம் முற்றிலும் மாறுபட்டது. கிட்டத்தட்ட ஒரு தற்கொலை முயற்சி போன்றது. அப்படியான பிரச்சினையை கடந்த 2023-ம் ஆண்டு முதல் மீண்டும் சூடான் எதிர்கொண்டுள்ளது.

2019-ம் ஆண்டு அந்த நாட்டின் அதிபர் ஒமர் அல்-பஷீர் நடத்தி வந்த சர்வாதிகார ஆட்சி மக்கள் போராட்டத்தால் அகற்றப்பட்டது. இதன்பின் புதிய அரசை அமைப்பதற்கான ஜனநாயக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, ராணுவம் நாட்டைக் கைப்பற்றியது. இதனால், சூடான் ராணுவத்துக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சூடான் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் செயல்படுகின்றன. அதுமட்டுமல்லாது ராணுவத்தின் ஒரு பிரிவான பலம் பொருந்திய துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் (Rapid Support Forces) என்ற பிரிவும் ராணுவ ஆட்சிக்கு எதிராக இயங்கிவந்தது. இந்நிலையில், ஏப்ரல் 2023-ல் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x