Published : 31 Oct 2025 12:14 PM
Last Updated : 31 Oct 2025 12:14 PM
வாஷிங்டன்: வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2022-ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி அமெரிக்காவில் இந்திய அமெரிக்கர்கள் 48 லட்சம் பேர் இருந்தனர். இவர்களில் 66% பேர் அமெரிக்காவில் குடியேறியவர்கள், 34% பேர் அமெரிக்காவில் பிறந்தவர்கள்.
வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தியது. தற்போது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தானியங்கி முறையில் வழங்கப்பட்டு வந்த பணி நீட்டிப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அமெரிக்காவில் பல வகை விசாக்களில் பணியாற்றும் இந்தியர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைகள் உட்பட வெளிநாட்டினர் பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. இந்த விதிமுறைப்படி, வெளிநாட்டு தொழிலாளர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு பணி நீட்டிப்பு அனுமதி கிடைக்காது.
இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை துறை இயக்குநர் ஜோசப் எட்லோ கூறுகையில், “வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கும் முன் அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு அங்கீகாரம் காலாவதியாவதற்கு 180 நாட்களுக்கு முன்பே, பணி நீட்டிப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அமெரிக்காவில் பணியாற்றுவதை வெளிநாட்டு தொழிலாளர்கள் ஒரு வாய்ப்பாக கருத வேண்டும். உரிமையாக கருதக் கூடாது” என்றார்.
இதற்கு முன்பு வெளிநாட்டு தொழிலாளர்கள் படிவம் 1-765-ஐ சமர்பித்து தானியங்கி முறையில் 540 நாள் பணி நீட்டிப்பு அனுமதியை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT