Published : 30 Oct 2025 02:35 AM
Last Updated : 30 Oct 2025 02:35 AM
சியோல்: பிரதமர் மோடி வலிமையான தலைவர், அவரை எனக்கு பிடிக்கும். தாமதமாகி கொண்டிருக்கும் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டு வருகிறது. ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதால், அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. அமெரிக்காவிடம் இருந்து சோளம் மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றை இறக்குமதி செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்கமாட்டோம் என இந்திய அரசு கூறிவருகிறது. இதன் காரணமாக இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் தாமதமாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் கடந்த வாரம் தொலைபேசியில் பேசினர். ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தியா ஒப்புக்கொண்ட பிறகு, இறக்குமதி வரியை 16 சதவீதமாக குறைக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஆசிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தென்கொரியா சென்றுள்ளார். அங்கு ஆசியா பசிபிக் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதாவது:
பிரதமர் மோடி மிகவும் சிறந்த நபர். அவர் வலிமையானவர். அவரை சம்மதிக்க வைப்பது சிரமம். ஆனால், நாங்கள் போராடுவோம் என்றார். இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டுள்ளது. இதில் இரு நாடுகளும் கையெழுத்திடும்.
போரை நிறுத்தினேன்: இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் நாங்கள் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்துகிறோம். இரு நாடுகளும் போரிட்டபோது, நான் பிரதமர் மோடியிடம், ‘‘நீங்கள் சண்டையிட்டு கொண்டிருந்தால், உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முடியாது என கூறினேன். பின்னர் பாகிஸ்தான் பிரதமரை அழைத்தும் இதையே கூறினேன். 250 சதவீதம் வரிவிதிப்பேன் என நான் அச்சுறுத்தியபிறகு 48 மணி நேரத்துக்குள் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டன. இந்த சண்டையில் 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. எனது தலையீடு காரணமாக கோடிக்கணக்கானோர் உயிர் தப்பினர். இவ்வாறு அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறினார்.
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என கடந்த மே மாதம் முதல் அதிபர் ட்ரம்ப் கூறிவருகிறார். ஆனால் இதில் அமெரிக்காவின் தலையீடு எதுவும் இல்லை என இந்தியா தொடர்ந்து கூறிவருகிறது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரி விடுத்த வேண்டுகோளை அடுத்து சண்டை நிறுத்தம் முடிவு எடுக்கப்பட்டதாக
இந்தியா கூறிவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT