Published : 26 Oct 2025 06:56 AM
Last Updated : 26 Oct 2025 06:56 AM
புதுடெல்லி: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபை பெரும் தொகை கொடுத்து வாங்கினோம் என்று அமெரிக்க உளவுத் துறை முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் முன்னாள் அதிகாரியான அவர், இந்திய செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் அரசுடனான அமெரிக்காவின் உறவு மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஆட்சிக் காலத்தில் இரு நாடுகள் இடையிலான உறவு மிகவும் வலுவாக இருந்தது.
சர்வாதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதை அமெரிக்கா விரும்புகிறது. பொதுவாக சர்வாதிகாரிகள் மக்களின் கருத்துகள், ஊடகங்களின் செய்திகள் குறித்து துளியும் கவலைப்படுவது கிடையாது. அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபுடன் அமெரிக்கா நெருங்கி பணியாற்றியது.
பொருளாதார வளர்ச்சி, தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான ரூபாயை வாரி இறைத்தோம். இந்த பெரும் தொகை மூலம் முஷாரபை விலைக்கு வாங்கினோம். அவர் ஆட்சியில் இருந்தபோது ஒரு வாரத்தில் பலமுறை சிஐஏ அதிகாரிகள் சந்தித்துப் பேசுவது வழக்கம். அமெரிக்கா என்ன சொன்னாலும் அதை முஷாரப் அப்படியே செயல்படுத்துவார்.
பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து அவர்களை முஷாரப் மகிழ்ச்சியாக வைத்திருந்தார். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதாக அவர் நடித்து வந்தார். உண்மையில் அவர், இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை நடத்துவதில் தீவிரமாக இருந்தார்.
அல்- காய்தா தீவிரவாதிகளை அழிக்கவே பாகிஸ்தானுக்கு தாராளமாக நிதியுதவி வழங்கினோம். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் அல்-காய்தாவை அழிப்பதில் கவனம் செலுத்தவில்லை. இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது குறித்து மட்டுமே முஷாரபும் பாகிஸ்தான் ராணுவமும் தீவிர கவனம் செலுத்தின.
ஊழல் வழக்குகளில் சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெனாசீர் புட்டோ கடந்த 2000-ம் ஆண்டில் சொந்த நாட்டை விட்டு வெளியேறி துபாயில் வசித்தார். அங்கு அவர் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்தார். ஆனால் பாகிஸ்தான் மக்கள் மிகுந்த ஏழ்மையில் வாடினர். இதுதான் பாகிஸ்தானின் உண்மை முகம் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT