Published : 24 Oct 2025 07:24 AM
Last Updated : 24 Oct 2025 07:24 AM
பெய்ஜிங்: சீனாவில் ஒரு கட்சி நிர்வாக நடைமுறை உள்ளது. எதிர்க்கட்சிகள் கிடையாது. இதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி ஜின்பிங் கடந்த 2013-ம் ஆண்டில் அதிபராக பதவியேற்றார். கடந்த 2023-ம் ஆண்டில் அவர் 3-வது முறை அதிபராக தேர்வு செய்யப்பட்டு பதவியில் நீடிக்கிறார்.
அவரது தலைமைக்கு எதிராக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மூத்த ராணுவ தளபதிகள் போர்க்கொடி உயர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக ஏராளமான தலைவர்கள் மாயமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 3-வது மிகப்பெரிய தலைவரான ஹீ வெய்டோங்கை கடந்த மார்ச் மாதம் முதல் காணவில்லை.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி, அந்த நாட்டின் உயர்நிலைக் குழுவாக கருதப்படுகிறது. இந்த கமிட்டி ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பெய்ஜிங்கில் கூடி ஆலோசிப்பது வழக்கம். இதன்படி கடந்த 20-ம் தேதி அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் மத்திய கமிட்டியின் கூட்டம் பெய்ஜிங்கில் தொடங்கியது. இதில் 350 உறுப்பினர்கள் பங்கேற்றனர். 3 நாட்கள் நடைபெற்ற கூட்டம் நேற்று நிறைவுப் பெற்றது.
இதன் பிறகு மத்திய கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சி நிர்வாகம் மற்றும் ராணுவத்தில் முக்கிய பதவிகளில் இருந்த 9 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். குறிப்பாக ஹீ வெய்டோங்கின் பதவி நீக்கத்துக்கு மத்திய கமிட்டி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ராணுவத்தின் ஊழல் தடுப்பு துறை தலைவராக ஜாங் ஷெங்மின் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் மத்திய ராணுவ கமிஷனின் துணைத் தலைவராகவும் பதவி வகிப்பார்.
மத்திய கமிட்டி கூட்டத்தில் அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமைக்கு ஆதரவாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த 5 ஆண்டுக்கான திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் சுயசார்பு சீனா திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT