Published : 21 Oct 2025 12:06 PM
Last Updated : 21 Oct 2025 12:06 PM
பீஜிங்: “சீனா ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்வராவிட்டால் அந்நாட்டுப் பொருட்கள் மீது 155% வரி விதிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை ட்ரம்ப் நடத்தினார். அதன்பின்னர் பேசிய ட்ரம்ப், “சீனாவை அமெரிக்கா மிகுந்த மரியாதையுடன் நடத்தியது. ஆனால், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை சீனா தொடர்ந்தால் அதனை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது. சீனாவும் எங்களை மதிக்கிறது என்று நான் நம்புகிறேன்.
அவர்கள் தற்போது 55% வரி செலுத்துகிறார்கள். இதுவே அதிகம் தான். இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நவம்பர் 1-ம் தேதி மூதல் சீனா 155% வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும்.
வர்த்தகப் பேச்சுவார்த்தை மேசையில் தீர்க்கப்பட வேண்டிய தனது முக்கியக் கோரிக்கைகளான அரிதான கனிமங்கள், ஃபெண்டானில் மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றை அவர் பட்டியலிட்டார். புதிய ஏற்றுமதி தடைகளையும் விதிப்போம்.
ஆண்டாண்டுகாலமாக அமெரிக்காவை வர்த்தக ரீதியாக உலக நாடுகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திய சகாப்தமெல்லாம் முடிந்துவிட்டது. இனியும் அவர்கள் அமெரிக்காவை அப்படிப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. அமெரிக்கா அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பதில் வரி விதிப்புக்குப் பின்னர் எங்களை பயன்படுத்திக் கொள்ளும் போக்கு மாறிவிட்டது.
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். எங்களுக்குள் மிகச் சிறந்த உறவு உள்ளது. விரைவில் நாங்கள் சந்திப்போம். அமெரிக்கா - சீனா இடையேயான வலுவான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று நம்புகிறோம். இருவருமே மகிழ்ச்சியான ஒரு முடிவை எட்டுவோம்.” என்றார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்தப் பேட்டி வெளியான சில மணி நேரங்களிலேயே உலக வர்த்தக அமைப்புக்கான (டபிள்யுடிஓ - WTO) சீனாவின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த லீ செங்காங் மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக அப்பதவியில் லீ யோங்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT