Last Updated : 20 Oct, 2025 06:21 PM

5  

Published : 20 Oct 2025 06:21 PM
Last Updated : 20 Oct 2025 06:21 PM

பாக். தலைவர்கள் ஆசிப் அலி, ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் தீபாவளிக்கு வாழ்த்து

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் பாகிஸ்தானிலும் உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

அதிபர் ஆசிப் அலி சர்தாரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இருளை ஒளி வெற்றி கொள்வதையும், தீமையை நன்மை வெற்றி கொள்வதையும் தீபாவளி அனைவருக்கும் நினைவூட்டுகிறது. நம்பிக்கை, நேர்மறை எண்ணம் மற்றும் ஒற்றுமையை இது வெளிப்படுத்துகிறது.

பாகிஸ்தானின் அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகளையும் முழு மத சுதந்திரத்தையும் உத்தரவாதம் செய்கிறது. சிறுபான்மையினர் பாகுபாடு இல்லாமல் சம வாய்ப்புகளை அனுபவிக்கும் பாகிஸ்தானை முகமது அலி ஜின்னா கற்பனை செய்தார்" என தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், "நம்பிக்கை எத்தகையது என்பதை கருத்தில் கொள்ளாமல் அனைத்து சமூகங்களுக்கும் சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய நலன், அனைவருக்குமான முன்னேற்றம் ஆகியவற்றில் பாகிஸ்தான் அரசு உறுதியாக உள்ளது.

வீடுகள் மற்றும் இதயங்கள் தீபாவளியின் ஒளியால் ஒளிரட்டும். இந்த பண்டிகை இருளை அகற்றி, நல்லிணக்கத்தை வளர்த்து, அமைதி, இரக்கம், செழிப்பு ஆகியவற்றைக் கொண்ட எதிர்காலத்தை நம் அனைவக்கும் வழங்கட்டும்.

தீபாவளியின் உணர்வு சகிப்பின்மை, சமத்துவமின்மை போன்ற சமூக சவால்களை சமாளிக்க கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கிறது. அனைத்து மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கும் சகிப்புத்தன்மை மற்றும் மரியாதை நிறைந்த சூழலை உருவாக்குவதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முழுவதும் இந்துக்கள் பாரம்பரிய முறையில் தீபாவளியைக் கொண்டாடி வருகிறார்கள். கோயில்கள் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வீடுகளில் பூஜைகள் செய்வது, இனிப்புகளை பரிமாறிக்கொள்வது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. செழிப்பு மற்றும் அமைதிக்கான பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

சிந்து மாகாணத்திலும் தெற்கு பஞ்சாபிலும் பட்டாசுகள் வெடித்து மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கராச்சியில் உள்ள சுவாமி நாராயண் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ உள்ளிட்டோர் தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். சிந்து மாகாண அரசு இந்துக்களுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளது. கராச்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பூஜைகள் நடத்தப்பட்டு கேக் வெட்டி தீபாவளி கொண்டாடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x