Published : 20 Oct 2025 05:43 AM
Last Updated : 20 Oct 2025 05:43 AM
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள இலூவா அருங்காட்சியகம். இங்கு மோனோலிசா ஓவியம் உட்பட வரலாற்று சிறப்புமிக்க 33,000 கலைப் பொருட்கள், சிற்பங்கள், நகைகள், ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கலைப் பொருட்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் பல முறை திருடுபோயுள்ளன. கொள்ளை முயற்சி சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த அருங்காட்சியகத்தில் நேற்று முன்தினம் ஒரு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. ஸ்கூட்டரில் வந்த கொள்ளையர்கள் அருங்காட்சியகத்தில் கட்டிட பராமரிப்பு நடைபெற்ற இடத்தின் வழியாக ஊடுருவியுள்ளனர்.
ஹைட்ராலிக் ஏணியை பயன்படுத்தி அருங்காட்சியகத்தில் நுழைந்த கொள்ளையர்கள், அப்போலோ வளாகத்தில் உள்ள பிரெஞ்சு மன்னர்கள் மற்றும் ராணிகள் பயன்படுத்திய 9 கிரீடங்கள் மற்றும் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இது மன்னர் நெப்போலியன் காலத்து நகைகள் ஆகும்.
டிஸ்க் கட்டர் மூலம் நகைககள் வைத்திருந்த கண்ணாடி பெட்டியை வெட்டி கிரீடங்கள் மற்றும் நகைகளை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் 7 நிமிடங்களில் முடிந்துள்ளது. நன்கு திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை கொள்ளையர்கள் அரங்கேற்றியுள்ளனர் என பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனஸ் தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டின் பிரபல அருங்காட்சியகத்தில் மிகப் பெரிய கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதை அந்நாட்டு கலாச்சாரத்துறை அமைச்சர் ரச்சிதா ததி நேற்று காலை அறிவித்தார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அருங்காட்சியகத்துக்கு ஏற்பட்ட சேதம் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. கொள்ளை சம்பவத்தையடுத்து, இலூவா அருங்காட்சிகம் நேற்று மூடப்பட்டது. அருங்காட்சியகம் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. அங்கு நேற்று பார்வையாளர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT