Published : 18 Oct 2025 08:09 PM
Last Updated : 18 Oct 2025 08:09 PM
காசா: காசாவில் ஒரு பேருந்தின் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பாலஸ்தீனிய குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்ததாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல், “ஜெய்துன் பகுதிக்கு கிழக்கே இடம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் அபு ஷபான் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஜெய்துன் பகுதியில் இருந்த தங்கள் வீட்டை கண்டறிய முயன்றபோது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று கூறினார்.
ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேல் படைகள் நிறுத்தப்பட்டுள்ள எல்லைப் பகுதியான மஞ்சள் கோட்டின் அருகே வந்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நோக்கி படைகள் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால், அந்த வாகனம் அச்சுறுத்தும் வகையில் அருகே வந்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம் இப்போது இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. ஆனால், போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மஞ்சள் கோட்டை நெருங்கும் அல்லது கடப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் விளக்கமளித்துள்ளது.
போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளைத் தேடி வடக்கு காசாவுக்குத் திரும்பியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான போரினால் ஏற்பட்ட பெரும் அழிவுக்கு மத்தியில் தங்கள் வீடுகளை கண்டுபிடிக்க முடியாமல் அவர்கள் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT