Published : 18 Oct 2025 06:38 PM
Last Updated : 18 Oct 2025 06:38 PM
இஸ்லாமாபாத்: எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைக்கும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கைபர் பக்துன்க்வாவின் அபோட்டாபாத்தில் உள்ள முதன்மை பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நடைபெற்ற ராணுவ கேடட் பயிற்சி பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர், “அணுசக்திமயமாக்கப்பட்ட சூழலில் போருக்கு இடமில்லை என்று இந்திய ராணுவத் தலைமைக்கு நான் அறிவுறுத்துகிறேன், உறுதியாக எச்சரிக்கிறேன். இந்தியாவுடனான நான்கு நாள் மோதலின்போது பாகிஸ்தான் வெளியிலிருந்து ஆதரவைப் பெற்றதாகக் கூறுவது தவறானது.
நாங்கள் ஒருபோதும் மிரட்டப்பட மாட்டோம், வார்த்தைகளால் வற்புறுத்தப்பட மாட்டோம், ஒரு சிறிய ஆத்திரமூட்டும் தூண்டுதலுக்குக் கூட எந்த தயக்கமும் இல்லாமல் தீர்க்கமான பதிலடி கொடுப்போம். இதுவரை இந்தியாவின் அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு நமது ஆயுதப் படைகள் தொலைநோக்கு திறன்களை வெளிப்படுத்தியுள்ளன.
பாகிஸ்தானை நிலைகுலையச் செய்ய பயங்கரவாதத்தை ஓர் ஆயுதமாக இந்தியா பயன்படுத்துகிறது. ஒரு சில பயங்கரவாதிகளால் பாகிஸ்தானுக்கு தீங்கு விளைவிக்க முடியாது. காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச விதிமுறைகளின்படி தீர்க்க வேண்டும். ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு தார்மிக மற்றும் ராஜதந்திர ஆதரவை வழங்குவோம். பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடு. நாங்கள் அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட பெரிய நாடுகளுடன் வலுவான உறவுகளை கொண்டுள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT