Published : 15 Oct 2025 12:39 AM
Last Updated : 15 Oct 2025 12:39 AM
ஜெருசலேம்: காசாவில் நீண்ட நாட்களாக பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து 738 நாட்களுக்குப் பிறகு இஸ்ரேல் தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம் - பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்த ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முயற்சியால் இரு தரப்பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து காசாவில் 10-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் இந்த காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது. முன்னதாக, ஹமாஸ் குழுவின் பிடியில் இருந்த 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதேபோல் இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 154 பாலஸ்தீனர்களும் விடுவிக்கப்பட்டனர்.
பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அவிநாட்டன் ஓர் என்பவரும் விடுவிக்கப்பட்டார். இவர் ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்த 20 இஸ்ரேலியர்களில் ஒருவர் ஆவார்.
சுமார் 738 நாட்கள் பிணைக் கைதியாக இருந்த இவர் நேற்று முன்தினம் வீடு வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்ததும் அவரது மனைவி நோவா அர்காமனி ஓடி வந்து கட்டியணைத்துக் கொண்டார். கணவரை முத்தமிட்டு வரவேற்றார். சந்தோஷத்தில் அவர் வாய்விட்டு அழுதார்.
மனைவியைப் பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுதார் அவிநாட்டன் ஓர். அவிநாட்டனின் மனைவி நோவா அர்காமனியும், பிைணக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்தார். இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த ஆண்டு மேற்கொண்ட முயற்சியால் அவர் விடுவிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கும் மேலான பிரிவுக்குப் பின்னர் தம்பதியர் ஒன்று சேர்ந்ததற்கு நண்பர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இருவரும் கட்டியணைத்து வரவேற்ற வீடியோ, புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. தனது மனைவியின் கன்னத்தில் அவிநாட்டன் ஓர், முத்தமிடும் புகைப்படத்தை இஸ்ரேல் நாட்டு பாதுகாப்புப் படையினர் (ஐடிஎஃப்) சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து நோவா அர்காமனி கூறும்போது, “2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நடைபெற்ற இசைத் திருவிழாவின்போதுதான் ஹமாஸின் தாக்குதல் நடந்தது. அந்த பயங்கர இரவுப் பொழுதை மறக்கவே முடியாது. அந்த இரவில் கணவர் என்ன ஆனார்? கடத்தப்பட்டாரா, கொலை செய்யப்பட்டாரா என்பதே தெரியவில்லை.
எனது கணவரை 2 ஆண்டுக்கு பிறகு பார்த்தேன். இப்போது இணைந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். 245 நாட்கள் பிணைக் கைதியாக இருந்தவர் நோவா அர்காமனி என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT