Published : 13 Oct 2025 04:43 PM
Last Updated : 13 Oct 2025 04:43 PM
புதுடெல்லி: காசாவில் போரை நிறுத்தியதற்காக இஸ்ரேல், எகிப்து நாடுகள், தங்கள் நாடுகளின் மிக உயரிய விருதுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு வழங்கவுள்ளன.
காசாவிலிருந்து பிணைக்கைதிகளை விடுவிப்பதிலும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆற்றிய பங்குக்காக, நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருதை வழங்குவதாக இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் அறிவித்தார்
இது தொடர்பாக இஸ்ரேல் அதிபர் அலுவலகத்தின் சார்பில் வெளியான அறிக்கையில், ‘தனது அயராத முயற்சிகள் மூலம், ட்ரம்ப் நமது அன்புக்குரியவர்களை வீட்டுக்கு அழைத்து வர உதவியது மட்டுமல்லாமல், மத்திய கிழக்கில் பாதுகாப்பு, ஒத்துழைப்பு மற்றும் அமைதியான எதிர்காலத்துக்கான உண்மையான நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு புதிய சகாப்தத்துக்கான அடித்தளத்தையும் அமைத்துள்ளார். அவருக்கு இஸ்ரேலிய அதிபர் பதக்கத்தை வழங்கி கவுரவிப்பதை நான் பெருமையாகக் கருதுவேன். இந்த விருது வரவிருக்கும் மாதங்களில் அவருக்கு வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.
அதேபோல அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எகிப்து நாடு ‘மிக உயர்ந்த குடிமகன்’ விருதை வழங்கும் என்று அந்நாட்டின் அதிபர் அப்தெல்-ஃபத்தா எல்-சிசி அலுவலகம் தெரிவித்துள்ளது. காசாவில் போரை நிறுத்துவதற்கான ட்ரம்ப்பின் முயற்சிகளுக்காக அவருக்கு ‘தி ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருது வழங்கப்படும் என்று எகிப்து அதிபர் தெரிவித்தார். இந்த விருது, சமாதான முயற்சிகளை ஆதரிப்பதிலும், மோதல்களை நிறுத்துவதிலும், காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதிலும் ட்ரம்ப்பின் முக்கிய பங்களிப்பை அங்கீகரிக்கும் என்று எகிப்து அதிபரின் அறிக்கை அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT