Published : 13 Oct 2025 03:45 PM
Last Updated : 13 Oct 2025 03:45 PM
டெல் அவிவ்: உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 240-க்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் கடுமையான பதிலடியைத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளாக நீடித்த இந்த பதிலடியில் 65000-க்கும் அதிகமானா பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். காசா உருக்குலைந்து கிடக்கிறது. போர் சாவுடன் பட்டினிச் சாவும் தலைவிரித்தாடத் தொடங்கியது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்மொழிந்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் - ஹமாஸ் தரப்புகள் ஏற்றுக் கொண்டன. அதன்படி, போர் நிறுத்தமும் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடங்கியுள்ளது.
இதுவரை ஹமாஸ் உயிருடன் உள்ளா 20 பிணைக் கைதிகளை விடுவித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்குப் பதிலாக இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள நூறுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க உள்ளது.
ஐ.நா வரவேற்பு: இதனை வரவேற்றுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ், “காசாவில் இருந்து இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதை நான் வெகுவாக வரவேற்கிறேன். அவர்கள் விடுதையானதையும், தத்தம் அன்புக்குரியவர்களுடன் இணையப் போவதையும் நான் வரவேற்கிறேன். மிகுந்த துன்பத்தை அனுபவித்துவிட்டு அவர்கள் திரும்புகிறார்கள். அதேபோல், உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்களையும் ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும் என்பதை இத்தருணத்தில் நான் வலியுறுத்துகிறேன். இந்தப் போரை நிறுத்துவதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும், அடுத்த நகர்வுகளை வேகமெடுக்கச் செய்ய வேண்டும். ஐ.நா., காசா துயரத்தை, அதன் மக்களின் பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர உறுதுணையாக இருக்கும்.” என்றார்.
காசா உச்சி மாநாடு: இதற்கிடையில் காசா உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபர் மகமுது அப்பாஸ், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி உள்ளிட்ட 20 உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் காசாவின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT