Published : 12 Oct 2025 02:08 PM
Last Updated : 12 Oct 2025 02:08 PM
பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 100% வரி அச்சுறுத்தலுக்கு பதிலளித்துள்ள சீனா, ‘நாங்கள் ஒரு வரிப் போரை விரும்பவில்லை, ஆனால் நாங்கள் அதைப் பற்றி பயப்படவும் இல்லை. அமெரிக்கா, அச்சுறுத்தல்களுக்குப் பதிலாக பேச்சுவார்த்தைகள் மூலம் வேறுபாடுகளைத் தீர்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது.
சீனப் பொருட்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் கூடுதலாக 100% வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சீன அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘சீனாவின் நிலைப்பாடு எப்போதும் நிலையானது. நாங்கள் ஒரு வரிப் போரை விரும்பவில்லை, ஆனால் நாங்கள் அதைப் பற்றி பயப்படவும் இல்லை. அதிக வரிகள் விதிப்பதாக அடிக்கடி அச்சுறுத்துவது சீனாவுடன் ஒத்துப்போக சரியான வழி அல்ல.
அமெரிக்கா அச்சுறுத்தல்களுக்குப் பதிலாக பேச்சுவார்த்தைகள் மூலம் வேறுபாடுகளைத் தீர்க்க வேண்டும். அமெரிக்க தரப்பு அதன் வரிவிதிப்பு நடவடிக்கைகளில் பிடிவாதமாக இருந்தால், சீனா அதன் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி என்ன? - அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்ப் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கான வரியை கணிசமாக அதிகரித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் வரியை சற்று குறைத்தார். அந்த வகையில் சீன பொருட்களுக்கு இப்போது 30% வரி விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் கடந்த 10-ம் தேதி தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: ‘ஸ்மார்ட்போன், மின்சார வாகனங்கள், ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கு தேவைப்படும் அரியவகை தனிமங்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் உலக நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். உலக நாடுகளை தனது பிடியில் வைத்திருக்க விரும்பும் சீனாவை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
எனவே, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் நவம்பர் 1-ம் தேதி முதல் கூடுதலாக 100% வரிவிதிக்கப்படும். சீனா வேறு ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், இந்த உயர்வு உடனடியாக அமலுக்கு வரும்’ இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அக்டோபரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாக ஏற்கெனவே தெரிவித்திருந்த ட்ரம்ப், அந்த சந்திப்பு நடப்பதில் அர்த்தம் இல்லை என்றும் அந்த பதிவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT