Published : 12 Oct 2025 01:35 PM
Last Updated : 12 Oct 2025 01:35 PM
இஸ்லாமாபாத்: இந்தியா வந்துள்ள ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முட்டாகி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். இதனையடுத்து வெளியிடப்பட்ட இந்தியா-ஆப்கானிஸ்தான் கூட்டறிக்கை குறித்து தனது "வலுவான ஆட்சேபனைகளை" தெரிவிக்க ஆப்கானிஸ்தான் தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
ஆறு நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமையன்று ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி புதுடெல்லிக்கு வந்தார். அதனை தொடர்ந்து அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.
முட்டாகியின் இந்திய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்புக்குப் பின்னர் இரு நாடுகளின் சார்பில் வெளியான கூட்டு அறிக்கையில், ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை ஆப்கானிஸ்தான் கடுமையாகக் கண்டித்துள்ளது, மேலும் இந்திய மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இரங்கல் மற்றும் ஒற்றுமைக்கான ஆதரவை தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதன் அடையாளமாக, பிராந்திய நாடுகளிலிருந்து வெளிப்படும் அனைத்து பயங்கரவாதச் செயல்களையும் இரு தரப்பினரும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்தனர். மேலும், பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் பிரதேசத்தைப் பயன்படுத்த அனுமதிக்காது என்று முட்டாகி கூறினார்.
இந்த சூழலில் பயங்கரவாதம் பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினை என்ற முட்டாகியின் கருத்தை அந்த நாடு கண்டித்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் குறித்து கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட குறிப்புகள் தொடர்பாக பாகிஸ்தானின் வலுவான ஆட்சேபனைகளை ஆப்கானிஸ்தான் தூதரிடம் கூடுதல் வெளியுறவு செயலாளர் (மேற்கு ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான்) தெரிவித்ததாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தனது அறிக்கையில்," பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பாகிஸ்தானின் மீது மாற்றுவதன் மூலம், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான கடமைகளிலிருந்து ஆப்கானிஸ்தான் அரசு விலகிக்கொள்ள முடியாது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக கிட்டத்தட்ட நான்கு மில்லியன் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு எங்கள் நாடு அடைக்கலம் அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பிய நிலையில், எங்கள் நாட்டில் வசிக்கும் அங்கீகரிக்கப்படாத ஆப்கானிய நாட்டினர் அவர்களின் தாயகம் திரும்ப வேண்டும்.
மற்ற எல்லா நாடுகளையும் போலவே, பாகிஸ்தானும் அதன் எல்லைக்குள் வசிக்கும் வெளிநாட்டினரின் இருப்பை ஒழுங்குபடுத்தும் உரிமையைக் கொண்டுள்ளது. இஸ்லாமிய சகோதரத்துவம் மற்றும் நல்ல அண்டை நாடுகளுடனான நல்லுறவுகள் என்ற உணர்வில் ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கு மருத்துவம் மற்றும் கல்வி விசாக்களை தொடர்ந்து வழங்கி வருகிறோம். அமைதியான, நிலையான, பிராந்திய ரீதியாக இணைக்கப்பட்ட மற்றும் வளமான ஆப்கானிஸ்தானைக் காண பாகிஸ்தான் விரும்புகிறது’ எனத் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT