Published : 11 Oct 2025 12:26 AM
Last Updated : 11 Oct 2025 12:26 AM
ஸ்டாக்ஹோம்: வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு உரியவரை நார்வே நோபல் கமிட்டி தேர்வு செய்கிறது. இதர 5 பிரிவுகளின் நோபல் பரிசுக்கு உரியவர்களை ராயல் சுவிடிஷ் அகாடமி ஆப் சயின்சஸ் தேர்வு செய்கிறது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த 6-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டன. இந்த வரிசையில் அமைதிக்கான நோபல் பரிசு நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நார்வே நோபல் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக மரியா அமைதி வழியில் போராடி வருகிறார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகச் சிறந்த ஜனநாயக தலைவராக அவர் விளங்குகிறார். வெனிசுலாவில் செயல்பட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து சர்வாதிகாரத்துக்கு எதிராக அவர் போராடுகிறார்.
சர்வாதிகார ஆட்சி காரணமாக வெனிசுலாவில் இருந்து சுமார் 80 லட்சம் மக்கள் வெளியேறி உள்ளனர். இந்த சூழலில் மக்களுக்காக அவர் குரல் எழுப்பி வருகிறார். நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜனநாயக ஆட்சி அமைய வேண்டும். வறுமையை போக்க வேண்டும் என்ற அவரது கருத்துகள் வெனிசுலா மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றிருக்கிறது.
மரியாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனினும் சர்வாதிகாரத்துக்கு எதிராக அவர் துணிச்சலாக போராடி வருகிறார். அவரை கவுரவிக்கும் வகையில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.இவ்வாறு நார்வே நோபல் கமிட்டியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
யார் இந்த மரியா? - கடந்த 1967-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி வெனிசுலாவின் கரகஸ் நகரில் மரியா கொரினா மச்சாடா பிறந்தார். பொறியாளரான இவர் கடந்த 2001-ம் ஆண்டில் சுமேட் என்ற தொண்டு அமைப்பை தொடங்கினார்.
இதன்பிறகு அவர் அரசியலில் கால் பதித்தார். கடந்த 2010-ம் ஆண்டில் வெனிசுலா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் சர்வாதிகாரம், ஊழலுக்கு எதிராக துணிச்சலாக குரல் எழுப்பினார். இதன்காரணமாக கடந்த 2014-ம் ஆண்டில் அவரது எம்பி பதவி ரத்து செய்யப்பட்டது.
கடந்த 2024-ம் ஆண்டில் நடைபெற்ற வெனிசுலா அதிபர் தேர்தலில் ஜனநாயக ஒற்றுமை வட்டமேஜை என்ற எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் மரியா போட்டியிட்டார். ஆனால் அதிபர் தேர்தலில் போட்டியிட அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
கடந்த 2013-ம் ஆண்டு முதல் வெனிசுலாவின் அதிபராக நிக்கோலஸ் மதுரோ பதவி வகித்து வருகிறார். அவரது ஆட்சிக்கு எதிராக மரியா தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். அந்த நாட்டின் இரும்பு பெண்மணியாக அவர் போற்றப்படுகிறார். கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற மரியாவுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் 3 பேரும் வெளிநாடுகளில் உள்ளனர்.
இன்ப அதிர்ச்சி: மரியா கூறும்போது, “கடந்த 20 ஆண்டுகளாக வெனிசுலா மக்களின் உரிைகளுக்காக போராடி வருகிறேன். எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது இன்ப அதிர்ச்சியாக உள்ளது. இந்த விருதை வெனிசுலா மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். வெனிசுலாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியை எதிர்த்து பொதுமக்கள் போராடி வருகின்றனர். எங்கள் நாட்டில் மக்கள் ஆட்சி அமைய வேண்டும்” என்றார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏமாற்றம்: இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 244 தனிநபர்கள், 94 அமைப்புகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. எனினும் அதிபர் ட்ரம்ப் சமீபத்தில்தனக்கு அமைதிக்கான நோபல் பரிசுவழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இதுவரை 8 போர்களை நிறுத்திஉள்ளேன் என்று அவர் தொடர்ச்சியாக கூறி வருகிறார். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் ஜனவரி 31-ம் தேதிக்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும். கடந்த ஜனவரி20-ம் தேதி அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றார். அவரது தரப்பில் அமைதிக்கான நோபல்பரிசுக்கு பரிந்துரை சமர்ப்பிக்கப்படவில்லை. அதன்படி இந்த ஆண்டு அதிபர் ட்ரம்பின் பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை. இதனால் அதிபர் ட்ரம்ப் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் சியுங் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ அதிபர் ட்ரம்ப் உலக அமைதிக்காக பாடுபட்டுவருகிறார். பல்வேறு போர்களை நிறுத்திஉள்ளார். இதன்மூலம் ஏராளமான உயிர்களை அவர் காப்பாற்றி உள்ளார். அவர் மனிதாபிமானி. அவரைப் போன்று வேறு யாருமே கிடையாது. அமைதிக்கான நோபல் பரிசு அதிபர் ட்ரம்புக்கு வழங்கப்படாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அமைதிக்கு பதிலாக அரசியலை நார்வே நோபல் கமிட்டி தேர்வு செய்திருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT