Last Updated : 10 Oct, 2025 03:18 PM

 

Published : 10 Oct 2025 03:18 PM
Last Updated : 10 Oct 2025 03:18 PM

2025 அமைதி நோபல் பரிசு வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிப்பு

நார்வே: 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும், அதற்கு எல்லாத் தகுதியையும் பெற்றுவிட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிவந்த நிலையில், அவருக்கு அந்தப் பரிசு கிடைக்கவிலை.

“2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக அயராது போராடி, நாட்டில் சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகம் மலர குரல் கொடுத்து வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்படுகிறது.” என ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது. விருது அறிவிப்பை தி நார்வேஜியன் நோபல் கமிட்டியின் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரிட்நெஸ் அறிவித்தார்.

யார் இந்த மரியா கொரினா? - மரியா கொரினா மச்சாடோ, கடந்த 14 மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்து இருந்தாலும் கூட அவர் வெனிசுலாவை விட்டு வெளியேறவில்லை. இது அந்நாட்டு மக்கள் மத்தியில் அவருக்குப் பெரும் அபிமானத்தைப் பெற்றுத் தந்தது. மரியா, வெனிசுலாவின் ராணுவ ஆட்சி அகற்றப்பட்ட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டினார். அங்கே ஜனநாயகம் அமைதி வழியில் மலர அவர் வித்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

338 விண்ணப்பங்கள்.. கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பான் நாட்டின் நிஹோன் ஹிதான்கியோ என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டது. அந்த அமைப்பு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அண்குண்டு வீச்சில் தப்பியவர்களுக்காக செயல்படும் இயக்கமாகும்.

இந்நிலையில் இந்த ஆண்டு நோபல் அமைதிப் பரிசுக்காக, 338 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் 244 தனிநபர்கள் சார்ந்தது, 94 நிறுவனங்கள் சார்ந்தது. ஜனவரி 31 தான் நோபல் அமைதி விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகளைப் பெற கடைசி நாள். நோபல் அமைதி பரிசுக்கானவர்களை தேர்வு செய்யும் நார்வேஜியன் நோபல் கமிட்டியும் யாரேனையும் பரிந்துரை செய்யலாம். ஆனால், அவர்கள் பிப்ரவரிக்குள் அந்தப் பரிந்துரையை செய்ய வேண்டும்.

மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைப்​போருக்கு ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. அமைதிக்கான நோபல் பரிசு இன்று (அக்.10) அறிவிக்கப்பட்ட நிலையில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்.13-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

டிசம்பர் 10-ல் விருது விழா.. இவ்விருது அறிவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தங்க பதக்கம், பட்டயம், ரொக்கப் பரிசு 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.1.03 கோடி) உள்ளிட்டவை ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10-ல் வழங்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x