Published : 10 Oct 2025 11:32 AM
Last Updated : 10 Oct 2025 11:32 AM
மனிலா: தெற்கு பிலிப்பைன்ஸின் மின்தனோவோவில் இன்று 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ‘அழிவுகரமான சுனாமி’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தச் சூழலில், தற்போது பிலிப்பைன்ஸ், பலாவ் மற்றும் இந்தோனேசியாவுக்கான சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) நீக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இனி சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் மின்தனோவோ பகுதியில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நிலநடுக்கவியல் நிறுவனம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் 20 கிமீ (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதால், அருகிலுள்ள கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை மற்றும் விரைவான வெளியேற்ற ஆலோசனை வெளியிடப்பட்டது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ தொலைவில் "உயிருக்கு ஆபத்தான அலைகள்" உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிவோல்க்ஸ் நிறுவனம் கூறியது.
இதன் பின்னர் இந்தோனேசியா மற்றும் பலாவ்வின் சில பகுதிகளுக்கும் சுனாமி அச்சுறுத்தல் நீட்டிக்கப்பட்டது. இந்தோனேசியா வடக்கு சுலவேசி மற்றும் பப்புவாவிற்கு எச்சரிக்கை விடுத்தது. அலைகள் குறைந்த உயரத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தது.
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கவியல் நிறுவனம் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள கடலோர நகரங்களில் வசிப்பவர்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு கடுமையாக அறிவுறுத்தியது. "கடலோர நகரங்களில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும்" என்றும் அந்த நிறுவனம் தெரிவித்தது. இந்த சூழலில், தற்போது பிலிப்பைன்ஸ், பலாவ் மற்றும் இந்தோனேசியாவிற்கான சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) நீக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இனி சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய கடற்கரைகளில் சிறிய அலைகள் பதிவாகின. அதிகபட்சமாக இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசியில் அலைகள் 17 செ.மீ (6.7 அங்குலம்) உயரத்தை எட்டியது. சுனாமிக்கான பெரிய அச்சுறுத்தல் கடந்துவிட்டாலும், சிறிய அளவிலான கடல் கொந்தளிப்புகள் தொடரக்கூடும் என பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT