Last Updated : 10 Oct, 2025 11:59 AM

 

Published : 10 Oct 2025 11:59 AM
Last Updated : 10 Oct 2025 11:59 AM

உலகை கதிகலங்க வைத்த எட் கெய்ன் - யார் இந்த சைக்கோ கொலையாளி?

ஹாலிவுட் சினிமா ரசிகர்களுக்கு, குறிப்பாக க்ரைம் த்ரில்லர் படங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு ஹிட்ச்காக் இயக்கிய ‘சைக்கோ’ (1960), ‘டெக்சாஸ் செயின்ஸா மாஸக்கர்’ (1974), ‘தி சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ்’ (1991) ஆகிய படங்களை தெரியாமல் இருக்காது. இந்த மூன்று படங்களுக்கு ஒரு முக்கிய தொடர்பு உள்ளது. இந்த மூன்று கதைகளுமே 1950களில் அமெரிக்காவை உலக்கிய சைக்கோ கொலையாளியான ‘ப்ளைன்ஃபீல்ட் பட்சர்’ என்று அழைக்கப்படும் எட் கெய்னின் கதாபாத்திரத்தை தழுவி எடுக்கப்பட்டவை.

அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தைச் சேர்ந்த எட் கெய்ன் வழக்கமான சீரியல் கில்லராக வகைப்படுத்திவிட முடியாது. காரணம் அவர் செய்ததாக நிரூபிக்கப்பட்ட கொலைகள் இரண்டுதான். ஆனால் கல்லறைகளில் இருந்து சடலங்களை தோண்டி எடுத்து அவற்றிலிருந்து உறுப்புகளை நினைவுச் சின்னங்களாக சேகரித்தும், மனித தோல்களை உடைகளாக செய்து அணிந்தும் அதிர வைத்தவர்.

எட் கெய்ன் குறித்து உலகம் முழுவதும் எண்ணற்ற நாவல்கள், திரைப்படங்கள், ஆய்வுக் கட்டுரைகள் என வெளியாகி விட்டன. அந்த வரிசையில் தற்போது எட் கெய்னின் வாழ்க்கையை கொஞ்சம் கற்பனை கலந்து ஒரு வெப் தொடராக வெளியிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ். உலகை அதிர்ச்சியில் உறைய வைத்த ஜெஃப்ரி டாமர், மெனெண்டஸ் பிரதர்ஸ் போன்ற கொலையாளிகளை மையமாகக் கொண்டு வெளியான ‘மான்ஸ்டர்’ வெப் தொடரின் இந்த புதிய சீசன் எட் கெய்னை பற்றி விரிவாக பேசுகிறது.

கிறிஸ்தவ மதத்தின் மீது தீவிர பற்று கொண்ட எட் கெய்னின் தாய் தனது இரண்டு மகன்களையும் மிக கண்டிப்பான முறையில் வளர்த்துள்ளார். பெண்களை பார்ப்பதே பாவம் என்று கூறியுள்ளார். இன்னொரு புறம் குடிகார தச்சரான தந்தையும் தன் பங்குக்கு இரண்டு மகன்களையும் கண்மூடித்தனமாக அடித்து வந்துள்ளார். தீவிர மதப்பற்று, குடும்ப வன்முறைக்கு மத்தியில் வளரும் எட் கெய்ன் மற்ற சிறுவர்களிடம் இருந்து வித்தியாசமானவராக வளர்கிறார்.

எட் கெய்னுக்கு தெரிந்ததெல்லாம் வீடு, தன் பண்ணையில் இருக்கும் விலங்குகள், பள்ளி. புதிய நண்பர்களிடம் பேசினால் கூட தன் மகனை தண்டிப்பதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார் அவரது அம்மா. தந்தை இறந்த பின், அம்மாவும் இரண்டு மகன்களும் மட்டுமே அந்த 155 ஏக்கர் பண்ணை வீட்டில் வசித்து வந்துள்ளன. தாயின் கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு ஓடிப் போக நினைத்தார் எட் கெயினின் அண்ணன் ஹென்றி. 1944ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒருநாள், தாவரக் குப்பைகளில் தீவிபத்து ஏற்பட்டதாக போலீசுக்கு தகவல் சொல்கிறார் எட் கெய்ன். தீ அணைக்கப்படுகிறது. குப்பையின் நடுவே ஹென்றி பிணமாக கண்டெடுக்கப்படுகிறார். ஆனால் உடலில் எந்த தீக்காயமும் இல்லை. அவருக்கு இதயம் செயலிழந்ததாக அந்த வழக்கை போலீசார் முடித்தனர். ஆனால் பல வருடங்களுக்கு பிறகு எட் கெய்னிடம் நீங்கள்தான் உங்கள் அண்ணனை கொன்றீர்களா என்று கேட்டபோது ‘இருக்கலாம்’ என்று பதிலளித்திருக்கிறார் எட் கெய்ன். இது நெட்ஃப்ளிக்ஸ் வெப் தொடரிலும் வருகிறது.

இப்போது உலகில் எட் கெய்னுக்கு இருக்கும் ஒரே ஆதரவு அவரது தாய் மட்டுமே. ஆனால் ஹென்றி இறந்த சில நாட்களிலேயே சோகம் தாளாமல் பக்கவாதம் ஏற்பட்டு, பின்னர் சில நாட்களிலேயே எட் கெய்னின் அம்மா இறந்து போகிறார். தனிமையிலேயே வாழ்க்கையை கழித்த எட் கெய்ன், நேரத்தை போக்க கேனிபலிசம், ஹிட்லரின் நாஜி முகாம்களில் நடந்த சித்ரவதைகள் குறித்த புத்தகங்களை படித்து வந்திருக்கிறார். குறிப்பாக ஜெர்மனியில் யூதர்களின் தோல்களை உரித்து அதை வைத்து கலைப் பொருட்கள் செய்து வந்ததாக சொல்லப்படும் இல்சா கோச் என்ற பெண்ணைப் பற்றிய கதைகளை விரும்பிப் படித்து வந்திருக்கிறார்.

1957ஆம் ஆண்டு ப்ளைன்ஃபீல்டில் ஹார்டுவேர் கடை நடத்தி வந்த பெர்னிஸ் என்ற 58 வயது பெண் காணாமல் போகிறார். துணை ஷெரிஃப் ஆக இருந்த அவரது மகன் இதுகுறித்து விசாரித்த போது, பெர்னிஸின் கடையில் கடைசியாக பொருள் வாங்கியது எட் கெய்ன் என்பதை கண்டுபிடிக்கிறார். அன்று மாலையே எட் கெய்ன் கைது செய்யப்படுகிறார். அவரது வீட்டை சோதனை செய்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். விலங்குகள் அடைக்கப்பட்டிருக்கும் கொட்டகையில் பெர்னிஸின் உடல் தலை இல்லாத முண்டமாக கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தொங்கவிடப்பட்டிருந்தது. ‘தோல் உரிக்கப்பட்ட மானைப் போல’ அந்த உடல் தொங்கிக் கொண்டிருந்ததாக போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எட் கெயினின் வீடு முழுக்க நடந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள்:

  • மனித எலும்புகள்
  • மனித தோலினால் செய்யப்பட்ட கூடை
  • மனித தோலினால் செய்யப்பட்ட நாற்காலி உறைகள்
  • மேற்பகுதி அறுக்கப்பட்ட மண்டை ஓடு (பெண்களுடையது)
  • மண்டை ஓடுகளால் செய்யப்பட்ட கோப்பைகள்
  • பெண்ணின் தோலால் செய்யப்பட்ட மேலாடை
  • பெண்களின் முக தோலால் செய்யப்பட்ட சில முகமூடிகள்
  • கொலை செய்யப்பட்ட பெர்னிஸின் தலை
  • அதற்கு முன்பு கொல்லப்பட்ட மேரி ஹோகன் என்ற பெண்ணின் தலை
  • 4 மூக்குகள்
  • 9 பெண்ணுறுப்புகள்
  • இன்னும் பல…

இந்த சம்பவம் அமெரிக்காவை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையே கதிகலங்க வைத்தது. எட் கெய்ன் கொலை செய்தது மேரி ஹோகன், பெர்னிஸ் இரண்டு பெண்களை. ஆனால் மற்ற உறுப்புகள் அனைத்தும் கல்லறைகளில் இருந்து யாருக்கும் தெரியாமல் அவர் தோண்டி எடுத்த சடலங்களுடையது. தனது தாய் இறந்த பிறகு அந்த பிரிவை தாங்க முடியாத அவர், பெண்களின் சடலங்களை தோண்டியெடுத்து அதன் தோலைக் கொண்டு ஆடைகள், முகமூடிகள் செய்து அணிந்து கொண்டிருக்கிறார்.

எனினும் எட் கெய்ன் மீது நிரூபிக்கப்பட்ட 7 கொலை வழக்குகளும் உள்ளன. சிசிடிவி, தொழில்நுட்பங்கள் இல்லாத அந்த காலகட்டத்தில் இந்த கொலைகளை செய்தது எட் கெய்ன் தானா என்ற விடை கிடைக்கவில்லை.

நீதிமன்றத்தில் அவர் செய்த இரண்டு கொலைகளுக்கான குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், அவருக்கு மற்றவர்களுக்கு வழங்கும் தண்டனையை நீதிபதிகளால் வழங்க இயலவில்லை. காரணம் எட் கெய்னின் மனநலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக ( Schizophrenia ) மருத்துவர்கள் சான்றளித்தனர். காரணம் எட் கெய்னுக்கு தான் செய்த எதை பற்றியும் தெளிவாக நினைவில் இல்லை என்று அதிகாரிகள் கூறினர். பெர்னிஸை கொலை செய்தது பற்றி, பெர்னிஸின் கடையில் துப்பாக்கி வாங்கச் சென்ற போது, அப்போது தன் கையில் இருந்த துப்பாக்கி தானாகவே இயங்கி பெர்னிஸை சுட்டுவிட்டது என்றும் எட் கெய்ன் கூறியுள்ளார். எட் கெய்ன் வாழ்நாள் முழுவதும் மனநல மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தனது 77-வது வயது அந்த மருத்துவமனையிலேயே இருந்த எட் கெய்னை ஏராளமான நாவல் ஆசிரியர்கள், அதிகாரிகள், இயக்குநர்கள் வந்து சந்தித்து அவருடைய கதையை கேட்டுச் சென்றனர். பின்னாட்களில் எட் கெய்ன் கைதான மூன்று வருடங்களிலேயே திகில் பட மன்னன் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் எட் கெய்ன் வழக்கால் உந்தப்பட்டு ‘சைக்கோ’ படத்தை இயக்கினார். இப்படம் உலகம் முழுக்க இன்று வரை ஒரு கல்ட் கிளாசிக் ஆக பார்க்கப்படுகிறது. நெட்ஃப்ளிக்ஸ் தொடரிலுமே கூட ஹிட்ச்காக் ‘சைக்கோ’ படத்தை எடுத்த விதம் ஒரு கிளைக் கதையாக வருகிறது. டோபி ஹூப்பர் இயக்கிய ‘டெக்ஸாஸ் செயின்ஸா மாசாக்கர்’ படத்தை பற்றிய கதையும் வருகிறது.

தொடரின் இறுதியில் மருத்துவமனை பொறுப்பாளாராக இருக்கும் பெண் எட் கெய்னிடம் ‘யார் யாரோ உன்னைப் பற்றி இல்லாததையெல்லாம் எழுதுகிறார்கள், நீயே உன்னுடைய கதையை புத்தகமாக எழுதலாமே’ என்று கேட்பார். அதற்கு எட் கெய்ன், ‘என்னைப் பற்றி என்னை விட அவர்களுக்குத்தான் அதிகமாக தெரிந்திருக்கிறது’ என்று சொல்வார். அந்த அளவுக்கு எட் கெய்னைப் பற்றிய கதைகள் உலகம் முழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கற்பனை கலந்தும் எண்ணற்ற அளவில் வந்துவிட்டன.

தற்போது நெட்ஃப்ளிக்ஸ் தொடரே கூட கொடூர சைக்கோ கொலையாளியான எட் கெய்னை நல்லவராக காட்டி புனிதப்படுத்த முயல்வதாக தற்போது விவாதங்கள் கிளம்பியுள்ளன. வெளியானதுமே உலகம் முழுவதும் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துவிட்டது இத்தொடர். மனித உளவியல், தனிமையும், அதீத கண்டிப்பும் ஒரு மனிதனை எவ்வளவு தூரம் கொண்டு செல்லும் என்பதை உணர்வுபூர்வமாக பேசுகிறது. இத்தொடர் தமிழிலும் காணக்கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x