Published : 09 Oct 2025 04:28 PM
Last Updated : 09 Oct 2025 04:28 PM
டெல் அவிவ்: அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே காசா அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
காசாவில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான அமைதி ஒப்பந்தம் அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று மாலையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே 72 மணி நேர கவுண்டவுன் தொடங்கும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
ட்ரம்ப் நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்தின்படி, காசாவில் சண்டையை நிறுத்தி, பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஹமாஸும் முதல்கட்ட அமைதி ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளன. இரண்டு வருடங்களாக நீடித்து வரும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில், இதுவரை காசாவில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் காசாவை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதலால் காசா நகரமே நிர்மூலமாகியுள்ளது.
பிணைக் கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை பரிமாறிக்கொள்வது தொடர்பான காசா ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்ட 72 மணி நேரத்திற்குள் பரிமாற்றம் நிகழும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
இதுகுறித்து ட்ரம்ப் நேற்று தனது சமூகவலைதளப் பக்கத்தில், “இஸ்ரேலும் - ஹமாஸும் அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதனால் அனைத்து பிணைக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள். அமைதியை உருவாக்க, முதல்கட்ட ஒப்பந்தத்தின்படி தனது பாதுகாப்பு படையினரை இஸ்ரேல் திரும்பப்பெறும். அமைதியை ஏற்படுத்துபவர்கள் பாக்கியவான்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று (வியாழக்கிழமை) எகிப்தில் கையெழுத்திடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் 2,000 பாலஸ்தீன கைதிகளுக்கு பதிலாக 20 பணயக்கைதிகளை பரிமாறிக்கொள்ளும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 250 பாலஸ்தீனியர்களுக்கும், 2023 அக்டோபர் 7 அன்று போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட 1,700 பேருக்கும் ஈடாக பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இரண்டு வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்த வெளியான செய்திக்கு பின்னர் காசா மற்றும் இஸ்ரேலில் கொண்டாட்டங்கள் தொடங்கின. ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக காசாவில் இருந்து படைகளை திரும்பப் பெற தயாராகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஹமாஸும் இஸ்ரேலும் போர் நிறுத்தத் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், வடக்கு காசாவின் பகுதிகளில் பல வான்வழி தாக்குதல்கள் பதிவாகியுள்ளன என்று காசா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT