Published : 08 Oct 2025 12:45 AM
Last Updated : 08 Oct 2025 12:45 AM
ஸ்டாக்ஹோம்: அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவ நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு விவரங்களை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அமைப்பு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று வெளியிட்டது. அமெரிக்காவை சேர்ந்த ஜான் எம். மார்டினிஸ், பிரிட்டனை சேர்ந்த ஜான் கிளார்க், பிரான்ஸை சேர்ந்த மைக்கேல் டெவோரெட் ஆகியோர் இந்த ஆண்டு இயற்பியல் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மூன்று விஞ்ஞானிகளும் தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றனர். குவாண்டம் ஊடுருவல் குறித்த ஆய்வுக்காக அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு பந்தை சுவரில் எறிந்தால், அந்த பந்து திரும்பி வரும். இது அனைவரும் அறிந்த இயற்பியல் நிகழ்வு ஆகும். ஆனால் சில நுண்ணிய துகள்கள் சுவரை துளைத்து மறுபக்கம் செல்கின்றன. இதுவே குவாண்டம் ஊடுருவல் என்று அழைக்கப்படுகிறது. கடந்த 1984, 1985-ம் ஆண்டுகளில் குவாண்டம் ஊடுருவலை 3 விஞ்ஞானிகளும் அறிவியல்பூர்வமாக நிரூபித்தனர். இந்த சாதனைக்காக அவர்கள் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மருத்துவம், விண்வெளி, பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிப்பு உட்பட பல்வேறு துறைகளில் குவாண்டம் ஊடுருவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT