Published : 07 Oct 2025 11:44 AM
Last Updated : 07 Oct 2025 11:44 AM
நியூயார்க்: “சொந்த நாட்டுப் பெண்கள் 4 லட்சம் பேரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நாடு பாகிஸ்தான்” என்று ஐநா பாதுகாப்பு அவையில் நடைபெற்ற விவாதத்தில் இந்தியா குற்றம் சாட்டியது.
ஐநாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி சைமா சலீமின் பேசும்போது, "ஜம்மு காஷ்மீரை சுட்டிக்காட்டி இந்தியாவுக்கு எதிராகப் பேசினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், துரதிருஷ்டவசமாக ஒவ்வொரு ஆண்டும் எனது நாட்டுக்கு எதிராக குறிப்பாக அவர்கள் (பாகிஸ்தான்) விரும்பும் எங்கள் ஜம்மு காஷ்மீருக்கு எதிராக பாகிஸ்தான் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பதை கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
பெண்கள், அமைதி, பாதுகாப்பு விஷயத்தில் எங்களின் சாதனை தன்னிகரில்லாது, கறையற்றது. தனது சொந்த மக்களுக்கு எதிராக குண்டுவீசி இனப்படுகொலையை நடத்தும் ஒரு நாடு, தவறான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்கள் மூலம் உலகை திசைதிருப்ப முயல்கிறது.
1971-ல் கிழக்கு பாகிஸ்தானில், பாகிஸ்தான் நடத்திய ஆபரேஷன் சர்ச்லைட் ராணுவ நடவடிக்கையின்போது பல லட்சம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (30 லட்சம் பேர் என வங்கதேச அரசு குறிப்பிடுகிறது), 4 லட்சம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இப்படி ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையை அனுமதித்த நாடு பாகிஸ்தான். இன்று அந்த நாடு எத்தகைய பிரச்சாரத்தை மேற்கொள்கிறது என்பதை உலகம் பார்க்கிறது" என தெரிவித்தார்.
ஆயுத மோதல்களின்போது பெண்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் விவகாரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இதற்கான தீர்மானம் ஐநா பாதுகாப்பு அவையில் கடந்த 2000-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதன் 25-ம் ஆண்டை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதம் முன்னெடுக்கப்பட்டது. இதில், பாகிஸ்தான் பிரதிநிதி இந்தியாவுக்கு எதிராகப் பேசியதை அடுத்து, இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT