Published : 07 Oct 2025 06:43 AM
Last Updated : 07 Oct 2025 06:43 AM
ஸ்டாக்ஹோம்: மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வென்றவர்கள் குறித்த அறிவிப்பு நேற்று முதல் வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்வீடனின் கரோலின்ஸ்கா மையத்தின் நோபல் குழு வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோர், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பற்றி ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது கண்டுபிடிப்புகள், புற்று நோய் மற்றும் நோய் எதிர்ப்புசக்தி மூலம் சிகிச்சை அளிக்கும் ஆராய்ச்சிக்கு வழிவகுத்துள்ளன.
உடலின் சக்திவாய்ந்த எதிர்ப்பு சக்தி மண்டலம், ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், அது நமது உடல் உறுப்புகளையே தாக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் நவீன நோய்தடுப்பாற்றலை மாற்றியமைத்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பாதுகாவலர்கள், ஒழுங்குமுறை டி செல்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டு புதிய ஆராய்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளனர். இந்த கண்டுபிடிப்புகள், மருத்துவ பரிசோதனைகள் மூலம் மதிப்பீடு செய்யப்படும் சிகிச்சை முறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT