Published : 03 Oct 2025 09:21 PM
Last Updated : 03 Oct 2025 09:21 PM
வாஷிங்டன்: இஸ்ரேல் உடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள ஹமாஸ் தீவிரவாத படைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரைதான் கெடு என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை அன்று இதை தெரிவித்த ட்ரம்ப், இதுவே ஹமாஸுக்கு கடைசி வாய்ப்பு. அமைதி உடன்படிக்கை திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதல் மிக தீவிரமானது. அதற்கடுத்த இந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான காசா மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில் பாலஸ்தீனியர்கள் அல் மவாசி பகுதிக்கு இடம் பெயரும்படி இஸ்ரேல் படைகள் வலியுறுத்தின. அங்கு மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் கிடைக்கும் என்று வலியுறுத்துகின்றனர். இதுவரை காசாவில் இருந்து 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் தடாலடி: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மோதல் முடிவுக்கு வர வேண்டும், மத்திய கிழக்கு பகுதியில் அமைதி திரும்ப வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். இது குறித்து அதிபர் தேர்தல் பிரச்சாரம் மற்றும் 2-வது முறையாக அதிபரான பிறகும் பல்வேறு முறை ட்ரம்ப் பேசியுள்ளார். இந்த நிலையில்தான் வெள்ளிக்கிழமை அன்று ஹமாஸுக்கு அவர் இறுதி எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
“மத்திய கிழக்கு பகுதியில் ஏதேனும் ஒரு வழியில் நமக்கு அமைதி ஏற்பட வேண்டும். ரத்தம் தெறிக்கும் வன்முறை முற்று பெற வேண்டும். ஹமாஸ் வசம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். அதில் உயிரிழந்தவர்களின் உடலையும் ஒப்படைக்க வேண்டும். முக்கியமாக ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் (வாஷிங்டன் நேரப்படி) அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் உடன்பட வேண்டும். அந்த ஒப்பந்தம் உலகத்தின் பார்வைக்கு பகிரப்படும்.
இதுவே ஹமாஸுக்கு கடைசி வாய்ப்பு. இதற்கு உடன்படவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக மிக தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும். அது இதுவரை யாரும் காணாத நரகமாக அமையும்.
அக்டோபர் 7, 2023-ல் இஸ்ரேலில் ஹமாஸ் படுகொலைகளை அரங்கேற்றியது. அதற்கு பதிலடியாக இதுவரை ஹமாஸ் படையை சேர்ந்த 25,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்களும் எங்கு உள்ளார்கள் என அறிவோம். அவர்களும் வேட்டையாடப்படுவார்கள்” என ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT