Published : 01 Oct 2025 09:10 AM
Last Updated : 01 Oct 2025 09:10 AM
குவெட்டா: பாகிஸ்தானில் கார் குண்டு வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் அமைந்துள்ளது. அந்த நாட்டின் மொத்த பரப்பளவில் 44 சதவீதத்தை இந்த மாகாணம் கொண்டுள்ளது. கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் தனி நாடுகளாக உதயமானபோது பலுசிஸ்தானும் தனி நாடாக உருவெடுத்தது. ஆனால் கடந்த 1948-ல் பாகிஸ்தான் ராணுவம், பலுசிஸ்தானை ஆக்கிரமித்தது.
அப்போதுமுதல் பாகிஸ்தான் அரசுக்கும் கிளர்ச்சி குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அந்த மாகாண மக்கள் மிக நீண்ட காலமாக தனி நாடு கோரி போராடி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவ அடக்குமுறையில் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
பலுசிஸ்தானின் அண்டை மாகாணமான கைபர் பக்துன்கவா பகுதி மக்களும் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மாகாணத்தின் மாட்ரே தாரா கிராமத்தின் மீது பாகிஸ்தான் விமானப் படை அண்மையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்களில் 30 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவத்துக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்று தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த சூழலில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் துணை ராணுவப் படையின் தலைமை அலுவலகத்தை குறிவைத்து டிடிபி தற்கொலைப் படை தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் டிடிபி அமைப்பை சேர்ந்த 4 தீவிரவாதிகள், துணை ராணுவ படை (எப்.சி.) தலைமை அலுவலகம் நோக்கி விரைந்து சென்றனர். இந்த கார் எப்.சி. அலுவலகம் அருகே உள்ள பிரதான சாலையில் வந்தபோது வெடித்துச் சிதறியது.
இதில் 13 பேர் உயிரிழந்தனர். 32-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காரில் இருந்த 4 தீவிரவாதிகள் உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களது உடல்களை அடையாளம் காண முடியவில்லை. இதுகுறித்து பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “டிடிபி தீவிரவாத அமைப்பு குவெட்டாவில் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தி உள்ளது. இந்த அமைப்பு இந்தியாவின் உத்தரவின்படி செயல்படுகிறது" என்று குற்றம் சாட்டி உள்ளார்.
பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறும்போது, “குவெட்டாவில் உள்ள துணை ராணுவ படை தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்த டிடிபி தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர். ஆனால் அதற்கு முன்பாகவே அவர்களின் கார் வெடித்துச் சிதறிவிட்டது. டிடிபி தீவிரவாத அமைப்பு மட்டுமன்றி பலுசிஸ்தான் விடுதலைப் படையும் பாகிஸ்தான் ராணுவம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது" என்று தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT