Published : 30 Sep 2025 06:59 PM
Last Updated : 30 Sep 2025 06:59 PM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் உள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தை ஒட்டி நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்துள்ளனர்.
குவெட்டாவில் உள்ள சர்குன் சாலையில் பாகிஸ்தான் துணை ராணுவப் படையின் தலைமையகம் உள்ளது. இந்த தலைமையகத்தின் ஓரத்தில் சாலையை ஒட்டிய பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில், இந்த குண்டு வெடித்தது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
குண்டுவெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால், அருகில் இருந்த கட்டிடங்கள், வீடுகள் ஆகியவற்றின் ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்ததாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பின் சத்தம், அருகில் இருந்த நகர்களிலும் கேட்டதாகக் கூறப்படுகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த சிறிது நேரத்தில் துப்பாக்கிச் சூடும் கேட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் அச்சமடைந்த மக்கள், வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதச பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. சம்பவத்தை அடுத்து நகரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் துணை ராணுவப் படையின் தலைமையகம் அருகே திரும்பியபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்ட நிலையில், மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று பலுசிஸ்தான் சுகாதார அமைச்சர் பக்த் முகமது தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT