Published : 30 Sep 2025 08:09 AM
Last Updated : 30 Sep 2025 08:09 AM
குய்சோ: உலகின் மிக உயரமான பாலம் சீன நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 2 மணி நேரமாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்களாக குறைந்துள்ளது. சீனாவின் குய்சோ மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலம் நேற்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்துக்கு ஹுவாஜியாங் கிராண்ட் கன்யான் பாலம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து 625 மீட்டர் உயரத்தில் இந்தப் பாலம் அமைந்துள்ளது.
இரு மலைகளை இணைக்கும் விதமாக இந்தப் பாலம் மிகவும் அழகுடனும், சிறப்பாகவும் அமைந்துள்ளது. இதுவரை இப்பகுதியைக் கடக்க 2 மணி நேரம் எடுத்துக்கொண்ட நிலையில் தற்போது பாலத்தின் உதவியால் இரண்டே நிமிடத்தில் இப்பகுதியைக் கடந்து விட முடியும்.
இதற்கு முன்பு பெய்பான்ஜியாங் பகுதியில் தரைமட்டத்திலிருந்து 565 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு இருந்த பாலமே உலகின் மிக உயரமான பாலமாக இருந்தது. தற்போது இந்த ஹுவாஜியாங் கிராண்ட் கன்யான் பாலம் 625 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. 2,900 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலம் 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குய்சோ மாகாண போக்குவரத்து முதலீட்டு குழுமத்தின் திட்ட மேலாளர் வூ ஜாவோமிங் கூறும்போது, “625 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம் பொறியியலின் அற்புதமாக திகழ்கிறது.
இந்தப் பாலத்தை பொதுமக்கள் கண்டுகளிக்க வசதியாக 207 மீட்டர் உயரத்தில் லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாலத்தையொட்டி உணவகங்கள், பாலத்தை பொதுமக்கள் கண்டுகளிக்க பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது மிக விரைவில் பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT