Last Updated : 29 Sep, 2025 10:08 PM

1  

Published : 29 Sep 2025 10:08 PM
Last Updated : 29 Sep 2025 10:08 PM

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி: ட்ரம்ப்

நியூயார்க்: அமெரிக்க நாட்டுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதை தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் அவர் தெரிவித்துள்ளார்.

“ஒரு குழந்தையிடம் இருந்து மிட்டாய்களை திருடுவது போல அமெரிக்க தேசத்தின் திரைப்பட தயாரிப்புத் தொழிலினை மற்ற நாடுகள் களவாடியுள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது கலிபோர்னியா தான். ஏனெனில், அங்கு பலவீனமான மற்றும் திறமையற்ற ஆளுநர் ஆட்சி பொறுப்பில் உள்ளார்.

இந்த நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அமெரிக்க தேசத்துக்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்துள்ளேன். அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றுவேன்” என ட்ரம்ப் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த மே மாதம், “அமெரிக்க திரைப்படத் துறை மிக வேகமாக அழிந்து வருகிறது. மற்ற நாடுகள் அதற்கான முயற்சியை ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ளன. அது அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அனைத்துக்கும் மேலாக இந்தப் படங்கள் பிரச்சார பாணியில் உள்ளன.

எங்களுக்கு வேண்டியதெல்லாம் மீண்டும் அமெரிக்காவில் திரைப்படங்கள் எடுக்க வேண்டும். அதனால் இந்தப் புதிய கட்டண முறை திரைப்படத் துறையில் நிலவும் போட்டியை சமன் செய்வதையும், அமெரிக்க தேசத்தில் உள்ள ஸ்டூடியோக்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடர ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என ட்ரம்ப் அப்போது கூறியிருந்தார். மேலும், இந்த வரி விதிப்பு பணியை வணிகத் துறை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் கவனிக்க அப்போது அங்கீகாரம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து, உலக நாடுகள் விதிக்கும் வரிக்கு ஏற்ப பதில் வரி விதிக்கப்படும் என்று கூறிய அவர், அதற்கான பட்டியலை வெளியிட்டார்.

இதற்கு 90 நாள் காலக்கெடு அறிவித்தார். காலக்கெடு முடிந்ததும், உலக நாடுகள் மீதான வரி விதிப்பு அமலுக்கு வந்தது. இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக 5 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட வேளாண் விளைபொருட்கள், பால் பொருட்களுக்கான சந்தையை திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை. இதனால், உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையே, இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 7-ம் தேதி அமலுக்கு வந்தது. அத்துடன், ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 27-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்மூலம், இந்திய பொருட்கள் மீது 50% வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல அண்மையில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x