Published : 27 Sep 2025 11:56 AM
Last Updated : 27 Sep 2025 11:56 AM
நியூயார்க்: ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ என்ற பாலியல் குற்றச்சாட்டு ஆவணத்தில் தனது பெயர் இடம்பெற்றுள்ளது குறித்து டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார்.
புதிதாக வெளியான 6 பக்கங்கள் கொண்ட ஆவணத்தில், எலான் மஸ்க் கடந்த 2016 டிசம்பர் 6-ம் தேதி வர்ஜீனியா தீவுகளில் உள்ள எப்ஸ்டைன் தீவுக்கு சென்றாகத் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பகிர்வில், “இது தவறானது” என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். வேறு எந்த விளக்கங்களையும் சொல்லாமல் ஒற்றை வார்த்தையில் மஸ்க் பதிலளித்துள்ளது அவர் தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தரப்பில் கூறப்படுகிறது.
எப்ஸ்டீன் லீக்ஸ் பின்னணி என்ன? கடந்த 2015-ஆம் ஆண்டு வர்ஜீனியா கிஃபர் என்ற அமெரிக்க பெண், பிரிட்டனைச் சேர்ந்த கிஷ்லெய்ன் மேக்ஸ்வெல் என்பவர் மீது ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பாலியல் தொழில் இடைத்தரகருடன் சேர்ந்து கிஷ்லெய்ன் பாலியல் தொழிலுக்காக ஆள் கடத்தலில் ஈடுபட்டார் என்று கூறியிருந்தார். தானும் அவ்வாறாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், 1999 முதல் 2022 வரை பாலுறவில் ஈடுபடும் வயதை எட்டாத தன்னை பலருடனும் கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட வைத்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார் அவர் மீதான வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோது 2019 ஆகஸ்டில் அவர் நியூயார்க் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் அந்த வழக்குகள் கைவிடப்பட்டன. அவர் தொடர்பான விசாரணையில் நீதிமன்றம் அறிந்துகொண்ட தகவல்களும் சீலிடப்பட்டு வைக்கப்பட்டன. அந்த வழக்கில் பெரும் புள்ளிகளின் பெயர்கள் அடிப்பட்டது அதற்கு ஒரு காரணம்.
ஆனால், கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண நீதிபதியான லொரட்டா ப்ரெஸ்கே ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். “இனியும் அந்த வழக்கு விசாரணையில் இடம்பெற்ற முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் தொடர்பாக ரகசியம் காக்க வேண்டிய அவசியமில்லை. ஜனவரி 1-க்குப் பின்னர் படிப்படியாக விசாரணை விவரங்களை வெளியிடலாம்” என்றார்.
இதனைத் தொடர்ந்து வெளியான ஆவணங்களுக்கு ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ என்று பெயரிடப்பட்டது. இந்த விசாரணை விவரத்தில் பிரின்ஸ் ஆண்ட்ரூ முதல் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் வரை பலரது பெயர்களும் இடம்பெற்றுள்ளதால் ‘ஜெஃப்ரி லீக்ஸ்’ பரபரப்பான பேசுபொருளானது. ஏற்கெனவே முன்னாள் அதிபர் பில் கிளின்டன், இப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் எனப் பலரது பெயரும் இடம்பெற்றுவிட்ட நிலையில், இப்போது புதிதாக எலான் மஸ்க் மற்றும் ட்ரம்ப்பின் நெருங்கிய கூட்டாளியான ஸ்டீவ் பேனோன் ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT