Published : 26 Sep 2025 07:57 AM
Last Updated : 26 Sep 2025 07:57 AM
பாரீஸ்: பிரான்ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்காக, லிபியாவின் அப்போதைய அதிபர் கடாஃபியிடம் சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில், முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் சர்கோசி வெற்றி பெற்று அதிபரானார். அப்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக லிபியாவின் அப்போதைய அதிபர் மாமர் கடாஃபியிடம் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாகவும், இதற்கு பிரதிபலனாக, தனித்துவிடப்பட்ட லிபியாவுக்கு சர்வதேச அரங்கில் பிரான்ஸ் ஆதரவாக செயல்படும் என நிக்கோலஸ் சர்கோசி உறுதி அளித்ததாகவும் தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கில் அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்கு லிபியாவிடம் இருந்து நிதி பெற்றது சட்டவிரோதம் என குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி மறுத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்காக லிபியாவிடம் நிதி பெற்றது சட்டவிரோதம் என கூறிய நீதிபதிகள் சர்கோசிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்தனர்.
அவர் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தாலும், சிறை தண்டனை உறுதி என அவர்கள் தெரிவித்தனர். இந்த தீர்ப்பு குறித்து சர்கோசி கூறுகையில், ‘‘எனக்கு தண்டனை அறிவித்தவர்கள், நான் விரைவில் சிறையில் தூங்க வேண்டும் என விரும்புகின்றனர். இதில் நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதை கடைசிவரை போராடி நிரூபிப்பேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT