Last Updated : 24 Sep, 2025 12:07 PM

1  

Published : 24 Sep 2025 12:07 PM
Last Updated : 24 Sep 2025 12:07 PM

“அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி இந்தியா, ஆனால்...” - வரி விதிப்பு பற்றி மார்கோ ரூபியோ

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ | கோப்புப் படம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி இந்தியா எனத் தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, விளாடிமிர் புதினுக்கு எதிராகவே இந்தியா மீது ட்ரம்ப் அதிக வரிகளை விதித்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஃபாக்ஸ் டிவி நிகழ்ச்சியில், உக்ரைன் மீதான தாக்குதலை தொடர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்னும் எவ்வளவு காலம் கொடுக்கப் போகிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மார்கோ ரூபியோ, “அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். உதாரணத்துக்கு, இந்தியா எங்களுடைய மிக நெருக்கமான கூட்டாளி. இருந்தும், இந்தியாவுக்கு எதிராக ட்ரம்ப் அதிக வரிகளை விதித்தார். இது புதினுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியே.

இந்தியா மீது அதிக வரி விதித்துள்ள அதேநேரத்தில், நாங்கள் மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நேற்று மீண்டும் அவர்களுடன் சந்திப்புகளை நடத்தினோம். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது தொடர்பாகனதாகவே இந்த சந்திப்புகள் இருந்தன” என தெரிவித்தார்.

ரஷ்யா மீது ட்ரம்ப் நேரடி நடவடிக்கைகள் எதையும் ஏன் எடுக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த மார்கோ ரூபியோ, “ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த விவகாரத்தில், ஐரோப்பிய நாடுகளும் இணைய வேண்டும் என அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து பல ஐரோப்பிய நாடுகள் இன்னமும் அதிக அளவில் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்து வருகின்றன. இதுவும் ரஷ்ய போரை தொடர ஒரு காரணம்தான். உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை அளிப்பதிலும் நாங்கள் அதிக முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம்.” எனக் கூறினார்.

மேலும் அவர், “உலகில் அமைதியை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை ட்ரம்ப் எடுத்துள்ளார். தாய்லாந்து - கம்போடியா போர், இந்தியா - பாகிஸ்தான் போர், காங்கோ - ருவாண்டோ, அஜர்பைஜான் - அர்மீனியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த போர்களை தடுத்து நிறுத்தி அமைதியை நிலைநாட்டியவர் ட்ரம்ப். வேறு எந்த தலைவர்களும் இதைச் செய்யவில்லை. ஏன், ஐக்கிய நாடுகள்கூட இதைச் செய்யவில்லை. ஆனால், அவருக்கு அதிக பாராட்டுக்கள் கிடைக்காது.” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x