Published : 22 Sep 2025 04:18 PM
Last Updated : 22 Sep 2025 04:18 PM
இஸ்லாமாபாத்: கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை 8 குண்டுகளை வீசித் தாக்கியதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் பஷ்துன் மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாட்ரே தாரா கிராமத்தில், பாகிஸ்தான் விமானப்படை ஜேஎஃப்-17 போர் விமானங்கள் எல்எஸ்-6 வகையைச் சேர்ந்த 8 குண்டுகளை வீசித் தாக்கின. இந்த தாக்குதலால் கிராமத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டது, இதில் பலர் காயமடைந்தனர். பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.
விமானப்படை அப்பகுதியில் உள்ள தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) மறைவிடங்களை குறிவைத்து தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்தத் தாக்குதலில் உயிரிழந்த அனைவரும் பொதுமக்கள் ஆவர்.
சமீபத்திய நாட்களில், ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உளவுத்துறை அடிப்படையிலான தேடுதல் நடவடிக்கையின் போது ஏழு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவித்தது.
செப்டம்பர் 13-14 அன்று, கைபர் பக்துன்வாவில் நடந்த இரண்டு தனித்தனி மோதல்களில் 31 தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT