Published : 15 Sep 2025 06:56 AM
Last Updated : 15 Sep 2025 06:56 AM
லண்டன்: இங்கிலாந்தில் வெளிநாட்டினர் அதிகளவில் குடியேறுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி தீவிர வலது சாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில் நேற்று முன்தினம் லண்டனில் "யுனைட் தி கிங்டம்" பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்களது போராட்டத்துக்கு போட்டியாக சட்டப்பூர்வ குடியேறிகளுக்கு ஆதரவு தெரிவித்து "பாசிசத்துக்கு எதிரான பேரணி"க்கு ஸ்டாண்ட் அப் டு ரேசிசம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில், 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அவர்களை அப்புறப்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுத்தபோது தீவிர வலது சாரி ஆதரவாளர்கள் குழு பாட்டில் உள்ளிட்டவற்றை தூக்கியெறிந்து போலீஸார் மீது தாக்குதல் நடத்தியது. இதில், 26 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். அதில் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.இது தொடர்பாக 25 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
எலான் மஸ்க் ஆதரவு: டாமி ராபின்சனின் வலது சாரி பேரணிக்கு ஆதரவு தெரிவித்து எக்ஸ் தள உரிமையாளரான எலான் மஸ்க், வீடியோ இணைப்பு வழியாக பேசியதாவது: வாக்காளர்களை இறக்குமதி செய்வதால் இடதுசாரிகள் அதிக பலனடைகின்றனர். தங்கள் நாட்டு மக்களை தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க சமாதானப்படுத்த முடியாவிட்டால் இடதுசாரிகள் மற்ற நாடுகளிலிருந்து மக்களை தங்களுக்கு வாக்களிக்க இறக்குமதி செய்வார்கள். அது நிறுத்தப்படாவிட்டால் அது அவர்களுக்கு வெற்றிபெரும் ஒரு உத்தியாகவே அமையும். இவ்வாறு எலான் மஸ்க் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT