Published : 15 Sep 2025 12:16 AM
Last Updated : 15 Sep 2025 12:16 AM

இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: 2026 மார்ச்சில் பொதுத் தேர்தல்

காத்மாண்டு: நேபாளத்தில் இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார்.

நேபாளத்தில் அரசியல்வாதிகளின் பிள்ளைகள், தொழிலதிபர்கள், பணக்காரர்களின் வாரிசுகள் பணத்தை தண்ணீர்போல செலவழிப்பது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வது, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சந்தோஷமாக இருப்பது பொதுமக்களை எரிச்சலடைய செய்தது. இந்த செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் இளைஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதையடுத்து, நேபாளம் முழுவதும் சமூக வலைதளங்களுக்கு அரசு கடந்த 4-ம் தேதி தடை விதித்தது.இதனால் மேலும் கோபம் அடைந்த இளைஞர்கள் தலைநகர் காத்மாண்டுவில் குவிந்து நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. அதில் 75 பேர் உயிரிழந்தனர். 1,300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதைதொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பை ராணுவம் ஏற்றது.

நேபாளம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டது. பிரதமர் சர்மா ஒலி, மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதன்பிறகு, போராட்டக் குழுவினருடன் ராணுவ தளபதி அசோக் சிக்டெல் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, நாட்டின் இடைக்கால பிரதமராக பதவியேற்றார்.

இந்த சூழ்நிலையில், 2026 மார்ச் 5-ம் தேதி நேபாளத்தில் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் ராம் சந்திரா பவுதெல் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், இடைக்கால பிரதமர் சுசீலா தலைமையிலான நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றத்தையும் அதிபர் ராம் சந்திரா கலைத்துள்ளார். செப்டம்பர் 12-ம் தேதி முதல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.

ஆனால், இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ‘நாடாளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம், ஜனநாயகத்துக்கு எதிரானது, அரசியலமைப்புக்கு விரோதமானது’ என்று முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நேபாளி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் நேபாள கம்யூனிச கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை அதிபர் ராம் சந்திராவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, இடைக்கால அரசுக்கு தலைமை ஏற்றுள்ள பிரதமர் சுசீலா, சிறிய அளவில் கேபினட்டை அமைக்க திட்டமிட்டுள்ளார். அதில், உள்துறை, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை உட்பட 24 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x