Published : 13 Sep 2025 06:46 AM
Last Updated : 13 Sep 2025 06:46 AM
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆளும் குடியரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சார்லி கிர்க், அதிபர் ட்ரம்புக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.
இந்த சூழலில் கடந்த 10-ம் தேதி அமெரிக்காவின் யூட்டா மாகாணம், ஓரமில் உள்ள யூட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்லி கிர்க் பங்கேற்றார். அப்போது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.
இதில் தொடர்புடைய டெய்லர் ராபின்சன் (22), யூட்டா நகரில் நேற்று கைது செய்யப்பட்டார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை சேர்ந்த இவர் சுமார் 260 மைல் தொலைவு பயணம் செய்து சார்லியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.
டெய்லர் ராபின்சனின் தந்தை காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். தனது தந்தையிடம் டெய்லர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். உடனடியாக அவர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் யூட்டா நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த டெய்லர் ராபின்சன் பிடிபட்டார். எதற்காக அவர், சார்லியை கொலை செய்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “சார்லிகிர்க் கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்துள்ளோம். அவருக்கு நெருக்கமானவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலைக்கான காரணம் விரைவில் தெரியவரும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT