Published : 12 Sep 2025 08:16 PM
Last Updated : 12 Sep 2025 08:16 PM
காத்மாண்டு: நேபாளத்தில் நடந்த கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்த நிலையில், தற்போது ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் காத்மாண்டுவில் தெருக்களை சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல் மற்றும் சிதைந்த சுவர்களில் மீண்டும் வண்ணம் தீட்டுதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில், துடைப்பங்கள் மற்றும் கழிவுகளை சேகரிக்கும் பைகளுடன் ஜென் ஸீ இளைஞர்கள் நேபாள தலைநகர் முழுவதும் நடைபாதைகளைத் சுத்தம் செய்து குப்பைகளைச் சேகரிக்கின்றனர். மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் குளிர்சாதன பெட்டிகள், மைக்ரோவேவ் ஓவன்கள் மற்றும் மின்விசிறிகளை திருப்பிக் கொண்டு தரும் பணியிலும் இறங்கியுள்ளனர்.
இது குறித்து போராட்டக் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த தூய்மைப் பணி ஜென் ஸீ குழுவினரின் குடிமைப் பொறுப்பைக் காட்டுகிறது. அவர்களின் போராட்டம் மறுகட்டமைப்பையும் நோக்கமாகக் கொண்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேபாளத்தில் இடைக்கால பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆலோசனையில் நேபாள ராணுவத் தளபதி அஷோக் சிக்டெல் முக்கியப் பங்காற்றி வருகிறார். நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கிக்க்கு போராட்டக்காரர்கள் ஒருமனதமாக ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் இடைக்கால பிரதமராக பதவியேற்க சுசிலா கார்கியும் சம்மதம் தெரிவித்துள்ளார். எனினும், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமா என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பின்னணி என்ன? - நேபாளத்தில் அண்மையில் ‘நெப்போ பேபி’ என்ற பெயரில் வீடியோக்கள் பரவின. அதாவது அந்நாட்டு அரசியல் தலைவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், பிரபலங்களின் வாரிசுகள் தங்களின் ஆடம்பர வாழ்க்கையை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். இதன் எதிர்விளைவாக பேஸ்புக், யூ டியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதள கணக்குகளை நேபாள அரசு கடந்த 5-ம் தேதி முடக்கியது. இதனால் நேபாளம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. அந்த நாட்டு நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், அரசு அலுவலகங்கள், பிரதமர், அதிபர், மூத்த அமைச்சர்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
போராட்டம் வலுவடைந்ததால் அதிபர் ராம் சந்திர பவுடால், பிரதமர் சர்மா ஒலி அடுத்தடுத்து பதவி விலகினர். நாட்டின் பாதுகாப்பை ராணுவம் ஏற்று, நேபாளம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இந்தப் போராட்டத்தில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டனர். போராட்டங்களின்போது கிட்டத்தட்ட 1,700 பேர் காயமடைந்தனர். அவர்களில் சுமார் 1,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தப் போராட்டத்தால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
Nepal Gen Z is now cleaning their country after the protest. pic.twitter.com/LdiFTW8QjF
— Sandeep_kashyap (@Sandeep_K0504) September 12, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT