Published : 12 Sep 2025 03:08 PM
Last Updated : 12 Sep 2025 03:08 PM
காத்மாண்டு: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி-க்கு போராட்டக்காரர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் விரைவில் இடைக்கால பிரதமராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேபாள ராணுவத் தளபதி அஷோக் சிக்டெல், இது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதில், நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி-க்கு போராட்டக்காரர்கள் ஒருமனதமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். நாட்டின் இடைக்கால பிரதமராக பதவியேற்க அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். எனினும், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமா என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக நேபாள அதிபர் பவுடெல், ராணுவத் தளபதி அஷோக் சிக்டெல், சுசீலா கார்கி ஆகியோர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.
உயிரிழப்பு அதிகரிப்பு: ஆட்சியாளர்களுக்கு எதிராக நேபாளத்தில் கடந்த ஒரு வாரமாக நடந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. கடந்த திங்கள் கிழமை போராட்டம் தொடங்கிய அன்று 19 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து கூடி வருகிறது.
இந்திய பெண்மணி உயிரிழப்பு: காசியாபாத் நகரில் இருந்து நேபாளத்தின் பசுபதிநாத் கோயிலுக்கு ஆன்மிக சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட இந்தியர்களான ராம்வீர் சிங் கோலாவும் அவரது மனைவி ராஜேஷ் கோலாவும் அங்குள்ள 5 நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி உள்ளனர். இம்மாதம் 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அந்த நட்சத்திர விடுதிக்கு தீ வைத்ததில் அதில் இருந்து தப்பிக்க ராம்வீர் சிங் கோலா, திரைச்சீலையைப் பயன்படுத்தி தனது மனைவியை கீழே இறக்க முயன்றுள்ளார். அப்போது, கை நழுவி அவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜேஷ் கோலா உயிரிழந்துள்ளார். இன்று காலை அவரது உடல் காசியாபாத்தில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT