Last Updated : 12 Sep, 2025 12:38 PM

 

Published : 12 Sep 2025 12:38 PM
Last Updated : 12 Sep 2025 12:38 PM

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை: காரணம் என்ன?

பிரேசிலியா: பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 27 ஆண்டுகள் 3 மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற சதி செய்த குற்றத்துக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலின் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜெய்ர் போல்சனாரோ கடந்த 2019 முதல் 2022 வரை அந்நாட்டின் அதிபராக இருந்தார். வலதுசாரி கட்சித் தலைவரான இவர், 2022-ல் நடந்த அதிபர் தேர்தலில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தோல்வி அடைந்தார். எனினும், மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற ஜெய்ர் போல்சனாரோ சதி செய்ததாக குற்றச் சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்கில் நேற்று (செப். 11) தீர்ப்பளித்த 5 நீதிபதிகள் அடங்கிய பிரேசில் உச்ச நீதிமன்ற அமர்வு, குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியது. 5 நீதிபதிகளில் 4 பேர் ஜெய்ர் போல்சனாரோவை குற்றவாளி என அறிவித்துள்ளனர். ஐந்தாவது நீதிபதியின் தீர்ப்பை அடுத்தே தண்டனை இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், அவர் மீதான மற்ற குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டால் தண்டனைக் காலம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது வீட்டுக் காவலில் உள்ள 70 வயது ஜெய்ர் போல்சனாரோ, தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம்.

ஜெய்ர் போல்சனாரோவுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கவில்லை என்றும் அவர் மிகவும் சிறந்த நபர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், விசாரணையை ‘சூனிய வேட்டை’ என்றும் விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x