Published : 12 Sep 2025 06:37 AM
Last Updated : 12 Sep 2025 06:37 AM
காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமரை தேர்வு செய்வது தொடர்பாக சுமார் 12-க்கும் மேற்பட்ட போராட்டக் குழுக்களுடன் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
நேபாளத்தில் அண்மையில் "நெப்போ பேபி" என்ற பெயரில் வீடியோக்கள் பரவின. அதாவது அந்நாட்டு அரசியல் தலைவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், பிரபலங்களின் வாரிசுகள் தங்களின் ஆடம்பர வாழ்க்கையை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.
இதன் எதிர்விளைவாக பேஸ்புக், யூ டியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதள கணக்குகளை நேபாள அரசு கடந்த 5-ம் தேதி முடக்கியது. இதனால் நேபாளம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. அந்த நாட்டு நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், அரசு அலுவலகங்கள், பிரதமர், அதிபர், மூத்த அமைச்சர்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதுவரை 34 பேர் உயிரிழந்தனர்.
போராட்டம் வலுவடைந்ததால் அதிபர் ராம் சந்திர பவுடால், பிரதமர் சர்மா ஒலி அடுத்தடுத்து பதவி விலகினர். நாட்டின் பாதுகாப்பை ராணுவம் ஏற்று, நேபாளம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதன் காரணமாக நேபாளத்தில் அமைதி திரும்பி வருகிறது. புதிய பிரதமரை தேர்வு செய்வது தொடர்பாக 12-க்கும் மேற்பட்ட போராட்ட குழுக்களுடன் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த பேச்சுவார்த்தை நேற்றும் நீடித்தது.
நேபாள உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, நேபாள மின்சார ஆணையத்தின் முன்னாள் தலைவர் குல் மேன் கிசிங், காத்மாண்டு மேயர் பலேந்திர ஷா, தரன் நகர மேயர் ஹர்கா சம்பாங் உள்ளிட்டோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டு உள்ளன. இதில் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, மின்சார ஆணைய முன்னாள் தலைவர் குல் மேன் கிசிங் ஆகியோர் முன்வரிசையில் உள்ளனர்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு அருகே சுசிவபுரியில் உள்ள ராணுவ தளத்தில் பதவி விலகிய பிரதமர் சர்மா ஒலி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
1,000 இந்தியர்கள் தவிப்பு: நேபாளத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில நாட்களாக சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.
போராட்டங்களின்போது தலைநகர் காத்மாண்டு உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள சிறைகளில் இருந்து 13,000 கைதிகள் தப்பியோடி விட்டனர். இதில் சுமார் 1,400 பேர் மட்டும் பிடிபட்டு உள்ளனர். இந்த சூழலில் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 60 கைதிகள் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT