Last Updated : 10 Sep, 2025 02:06 PM

7  

Published : 10 Sep 2025 02:06 PM
Last Updated : 10 Sep 2025 02:06 PM

இந்தியாவின் நியாயமற்ற வர்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை: பீட்டர் நவரோ

அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ | கோப்புப் படம்

வாஷிங்டன்: இந்தியாவின் நியாயமற்ற வர்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை என்று அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. பரஸ்பர வரி விதிப்பின் அடிப்படையில் 25% வரி விதிப்பும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அபராதாமாக 25% வரி விதிப்பும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியப் பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு நியாயமற்றது, காரணமற்றது என குறிப்பிட்டுள்ள இந்தியா, ஏற்றுமதிக்கான மாற்று சந்தைகளை ஆராய தொடங்கியுள்ளது.

மேலும், சமீபத்தில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இவ்விரு நாடுகளுடனான இந்தியாவின் உறவை மேலும் வலுப்படுத்த அந்த சந்திப்பின்போது முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தியாவை தன் பக்கம் தக்கவைத்துக்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முயற்சி செய்து வருகிறார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், “இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். வரும் வாரங்களில் எனது நல்ல நண்பரான மோடியுடன் பேசுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன். இரு பெரிய நாடுகளுக்கும் வர்த்தக பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப்பின் இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ”இந்தியாவும் - அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகள். இயல்பான கூட்டாளிகள். நமது வர்த்தகப் பேச்சுவார்த்தை நம் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையற்ற திறன்களை கண்டெடுப்பதற்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதிபர் ட்ரம்ப்புடன் பேசுவதை நானும் எதிர்நோக்கியுள்ளேன். இரு நாட்டு மக்களுக்கும் வளமான, பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க நாம் உழைப்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, "இந்தியாவுக்கு எதிராக தொடர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அவர் தனது சமூக ஊடக பதிவுகளில், இந்தியாவின் நியாயமற்ற வர்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை. ஆனால், அமெரிக்க சந்தைகள், பள்ளிகள் ஆகியவற்றை அணுக இந்தியா மிகவும் விரும்புகிறது. மேலும், அமெரிக்க வேலைகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ள விரும்புகிறது.

ரஷ்யாவின் போர் முனை பற்றி எரிவதற்கு இந்தியா காரணமாக இருக்கிறது. மிக அதிக வரி விகிதத்தைக் கொண்டிருப்பதன் மூலம் இந்தியா சுய பாதுகாப்பில் பிடிவாதமாக உள்ளது. அமெரிக்கா, இந்தியாவடன் மிகப் பெரிய வர்த்தக பற்றாக்குறையை கொண்டிருக்கிறது. லாபத்துக்காக மட்டுமே ரஷ்ய எண்ணெய்யை இந்தியா வாங்குகிறது. அதன்மூலம் ரஷ்யாவுக்கு கிடைக்கும் வருவாய் போரை தூண்டுகிறது" என குற்றம் சாட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x