Published : 09 Sep 2025 11:37 PM
Last Updated : 09 Sep 2025 11:37 PM
ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் உறுப்பினர்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட கோழைத்தனமான இஸ்ரேலிய தாக்குதலை கத்தார் அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தக் குற்றவியல் தாக்குதல் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுவதாகும். மேலும் இது கத்தார் குடிமக்கள் மற்றும் கத்தாரில் வசிப்பவர்களின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்புப் படைகள், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக இந்த சம்பவத்தை பரிசீலித்து அதன் விளைவுகளைத் தடுத்து குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினர் என்பதை அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது.
இந்தத் தாக்குதலை கத்தார் அரசு வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், இஸ்ரேலின் இந்த பொறுப்பற்ற நடத்தையையும் பிராந்திய பாதுகாப்பில் தொடர்ந்து ஏற்படும் இடையூறுகளையும் அல்லது அதன் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை குறிவைக்கும் எந்தவொரு செயலையும் பொறுத்துக்கொள்ளாது என்பதை உறுதிப்படுத்துகிறது. உயர் மட்டத்தில் விசாரணைகள் நடந்து வருகின்றன, மேலும் விவரங்கள் கிடைத்தவுடன் அவை விரைவில் அறிவிக்கப்படும்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் நேற்று 6 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த, பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் மீது காரில் வந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். இதில் 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஹமாஸ் இயக்க தலைவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தலைவர்கள் தப்பிவிட்டதாகவும், எனினும் ஹமாஸின் காசா பிரிவு தலைவரின் மகன் உட்பட 6 பேர் கொல்லப்பட்டதாகவும் ஹமாஸ் உறுதி செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT