Published : 09 Sep 2025 01:29 PM
Last Updated : 09 Sep 2025 01:29 PM
புதுடெல்லி: நேபாளத்தில் இரண்டாவது நாளாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அதிகாரிகள் வெளியிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை எதிர்த்து நேற்று நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேபாளத்தில் போராட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில், “நேபாளத்தில் நேற்று முதல் நடக்கும் நிகழ்வுகளை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், மேலும் பல இளம் உயிர்களை இழந்ததில் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். இறந்தவர்களின் குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நாங்கள் விரும்புகிறோம்.
நமது நெருங்கிய நட்பு நாடாகவும், அண்டை நாடாகவும் உள்ள நேபாளத்தில் உள்ள அனைவரும் நிதானத்தைக் கடைப்பிடித்து, அமைதியான வழிமுறைகள் மற்றும் உரையாடல் மூலம் எந்தவொரு பிரச்சினையையும் தீர்ப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். காத்மாண்டு மற்றும் நேபாளத்தின் பல நகரங்களில் அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளதையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், நேபாள அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? - பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களை நேபாள அரசு முடக்கியது. இதனால், கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அவற்றை பயன்படுத்த முடியாமல் இளைஞர்கள் தவித்து வந்தனர்.
இதையடுத்து சமூக வலைதளங்கள் மீதான தடையை விலக்க கோரியும், நாட்டில் பரவியுள்ள ஊழல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும் நேற்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு தலைநகர் காத்மாண்டுவில் பேரணி நடத்தினர். அப்போது நியூ பனேஷ்வரில் நாடாளுமன்றத்துக்கு வெளியே போடப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயன்றனர். நேபாள பிரதமர் சர்மா ஒலி வீட்டின் மீது கற்களை வீசி எரிந்தும் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் மூண்டது. பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களால் சுட்டும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். இந்த கடும் மோதலில் 19 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் மூண்டது. இதையடுத்து பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரம் பரவி வருவதையடுத்து இந்தியா-நேபாளம் எல்லையில் விழிப்புடன் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நேபாள உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, சமூகவலைதள நிறுவனங்கள் பதிவு செய்யவும், குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்கவும் ஏழு நாட்கள் அவகாசம் வழங்க நேபாள அமைச்சரவை கடந்த மாதம் முடிவு செய்தது. இந்த நிலையில், பதிவு செய்துகொள்ளாத பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட26 சமூக வலைதளங்களை கடந்த வெள்ளிக்கிழமை முடக்கி நேபாள அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆன்லைன் மோசடி மற்றும் பண மோசடி ஆகியவற்றை சுட்டிக்காட்டி இதேபோன்று, கடந்த ஜூலையில் டெலிகிராம் மெசேஜ் செயலியை நேபாள அரசு தடை செய்தது.
இந்த நிலையில் எதிர்பார்க்காத அளவில் ஏராளமான இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால், சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நேபாள அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதனை அந்நாட்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரித்வி சுப்பா அறிவித்தார். இருப்பினும், இன்று காலை போராட்டங்கள் மீண்டும் தொடங்கின, போராட்டங்கள் ஊரடங்கு உத்தரவை மீறி நடந்தன. சாலைகளில் டயர்களை போட்டு எரித்தனர்.
இதற்கிடையில், நேபாள வேளாண் அமைச்சர் ராம் நாத் அதிகாரி இன்று பிரதமர் கே.பி. ஒலி தலைமையிலான அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். நேற்று அரசாங்கம் போராட்டங்களைக் கையாண்டதற்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ராஜினாமா செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT