Published : 09 Sep 2025 07:04 AM
Last Updated : 09 Sep 2025 07:04 AM
டெல் அவிவ்: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், ‘‘இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஜயோனிஸ்ட் ஸ்டிரேட்டஜி’’க்கான மிஸ்காவ் இன்ஸ்டிடியூட் மூத்த நிபுணர் ஸாக்கி ஷெலோம் கூறிய கருத்துகளை ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் விவகாரம், இந்தியா மீது 50% வரியை அமெரிக்கா விதித்த விவகாரம் ஆகியவற்றில் பிரதமர் மோடி கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார். அவரது அந்த நிலைப்பாடு, தேசிய கவுரவம் என்பது ஆடம்பரமானது அல்ல; அது ஒரு சொத்து என்பதை தெளிவுப்படுத்தியது.
இந்தியா - பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல முறை கூறிவிட்டார். அதை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. தேசத்தைப் புண்படுத்தும் விஷயத்தில் பிரதமர் மோடி கடுமையாக நடந்து கொண்டார். ஒருபடி மேலாக அதிபர் ட்ரம்ப் 4 முறை தொலைபேசியில் அழைத்தும் அதை பிரதமர் மோடி நிராகரித்து தனது நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் தேசத்தின் கவுரவத்தை பாதுகாப்பது எப்படி, தேசத்தின் கவுரவத்தை ஒரு சொத்தாக மாற்றுவது எப்படி என்பது போன்ற முக்கியமான விஷயங்களை பிரதமர் மோடியிடம் இருந்து பிரதமர் நெதன்யாகு கற்றுக் கொள்ள வேண்டும். காசா மருத்துவமனை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 20 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு இஸ்ரேல் அரசும் ராணுவமும் அவசரப்பட்டு விளக்கம் அளித்தன. இஸ்ரேல் ராணுவ தளபதியும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தனித்தனியாக வேறுபட்ட கருத்துகளை வெளியிட்டனர். இது சர்வதேச மக்கள் கருத்தை தணிப்பதற்காக இருந்தாலும், தங்களது பதற்றத்தை வெளிப்படுத்துவதாக அவர்களுடைய கருத்துகள் இருந்தன.
பிரதமர் மோடியின் செயல்பாடுகள் தெளிவான ஒரு செய்தியை சர்வதேச அளவில் வெளிப்படுத்தியது. இந்தியாவை யாரும் குறைத்து மதிப்பிடுவதையோ அல்லது தங்களுக்கு கீழ்தான் என்று சொல்வதையோ இந்தியா ஏற்காது என்ற செய்தியைத்தான் பிரதமர் மோடியின் செயல் வெளிப்படுத்தியது. எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தேசத்தின் கவுரவத்தை பாதுகாக்க வேண்டியதுதான் நாட்டின் தலைவருடைய கடமையாக இருக்க வேண்டும். இவ்வாறு ஸாக்கி ஷெலோம் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT