Published : 09 Sep 2025 06:51 AM
Last Updated : 09 Sep 2025 06:51 AM
ஜெருசலேம்: இஸ்ரேலில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து இஸ்ரேல் காவல் துறையினர் நேற்று கூறியதாவது: கிழக்கு ஜெருசலேமில் யிகல் யாடின் தெருவில் உள்ள ரமோத்சந்திப்பில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பேருந்தில் பயணம் செய்த, பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் மீது காரில் வந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். இதில், 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்கட்ட தகவலின்படி 2 தீவிரவாதிகள் துப்பாக்கியுடன் வந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியை சேர்ந்தவர்கள். பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவ்வாறு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸுக்கு ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையுமாறும், இல்லையென்றால் ஹமாஸ் அழிக்கப்படும் என்றும் இறுதி எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT