Published : 08 Sep 2025 02:29 PM
Last Updated : 08 Sep 2025 02:29 PM
லண்டன்: ராணுவக் காவலில் உள்ள மியான்மர் முன்னாள் ஆட்சியாளர் ஆங் சான் சூச்சியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது மகன் கிம் அரிஸ் தெரிவித்துள்ளார்.
மியான்மரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளரான ஆங் சான் சூச்சி, கடந்த 2021 முதல் அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்களால் சிறை வைக்கப்பட்டுள்ளார். ஊழல் மற்றும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இதற்காக, அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இந்நிலையில், தனது தாய் ஆங் சான் சூச்சி இதய பாதிப்பால் அவதிப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவரது மகன் கிம் அரிஸ் தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள கிம் அரிஸ் தொலைபேசியில் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “எனது அம்மாவுக்கு 80 வயதாகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு, ஒரு இருதய நோய் நிபுணரைப் பார்க்க அவர் கோரி உள்ளார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை.
சரியான மருத்துவப் பரிசோதனை இல்லாமல், அவரது இருதயம் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய முடியாது. நான் மிகவும் கவலையில் இருக்கிறேன். எலும்பு மற்றும் ஈறு பிரச்சினையாலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், இதில் அவர் காயமடைந்திருக்கலாம். அவர் உயிரோடுதான் இருக்கிறாரா என்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆங் சான் சூச்சி உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் மியான்மர் அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
கிம் அரஸின் இந்த குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்துள்ள ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜாவ் மின் துன், “ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங்கின் சீன பயணத்தை திசை திருப்பும் நோக்கில் இத்தகைய புரளி கிளப்பப்படுகிறது. சீனா சென்ற ராணுவத் தலைவர், அங்கு நடைபெற்ற அணிவகுப்பில் கலந்து கொண்டார். ராணுவத் தலைவரின் சீன பயணம் குறித்த செய்தியை மறைக்க சிலர் விரும்புகிறார்கள். ஆங் சான் சூச்சியின் உடல்நிலை நன்றாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
மியான்மரில் ஜனநாயகம் மலர தொடர்ந்து பாடுபட்டு வரும் ஆங் சான் சூச்சி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT