Published : 06 Sep 2025 01:37 PM
Last Updated : 06 Sep 2025 01:37 PM
புதுடெல்லி: இந்த மாதம் திட்டமிடப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகியின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. முத்தாகி மீதான ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தடைகளில் இருந்து, இந்திய பயணத்திற்கான விலக்கு பெற முடியாததால் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அனைத்து முன்னணி தலிபான் தலைவர்களுக்கும் எதிராக பயணத் தடைகளை விதித்துள்ளது. இதனால் அவர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு விலக்கு பெற வேண்டும். தற்போது வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகியின் இந்திய பயணத்துக்கு விலக்கு கிடைக்கவில்லை. எனவே அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த வருகை நடந்திருந்தால், ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, அந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வருகை தரும் முதல் அமைச்சராக முத்தாகி இருந்திருப்பார்.
முன்னதாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலின் வாராந்திர ஊடக சந்திப்பில், முத்தாகியின் இந்தியா வருகை குறித்து கேள்வி எழுப்பியபோது, “ ஆப்கானிஸ்தான் மக்களுடன் இந்தியாவுக்கு நீண்டகால உறவுகள் உள்ளன. ஆப்கானிஸ்தான் மக்களின் அபிலாஷைகள் மற்றும் வளர்ச்சித் தேவைகளை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். இது குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம்" என்று அவர் கூறினார்.
வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மே 15 அன்று தலிபான் அமைச்சர் முத்தாகியுடன் தொலைபேசியில் உரையாடினார். தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவுக்கும், ஆப்கனுக்குமாக குறிப்பிடத்தக்க நிகழ்வாக அது இருந்தது.
இந்தியா இதுவரை தலிபான் அமைப்பை அங்கீகரிக்கவில்லை. மேலும், ஆப்கனில் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது. எந்தவொரு நாட்டிற்கும் எதிரான, எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தக்கூடாது என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT